மூன்றாம் கண்.,: நானும் குற்றவாளிதான்; என்னை கைது செய்யுங்கள்: அத்வானி ஆவேசம்

Thursday, September 8, 2011

நானும் குற்றவாளிதான்; என்னை கைது செய்யுங்கள்: அத்வானி ஆவேசம்


"நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்கள் எல்லாம் இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர்.
ஆனால், அந்த ஊழலை அம்பலப்படுத்திய பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் இருவர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் சேவை செய்துள்ள அவர்களின் செயல் கிரிமினல் குற்றம் என்றால், அவர்களுக்கு அனுமதியளித்த நானும் குற்றவாளியே. என்னையும் கைது செய்யுங்கள்,'' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ஆவேசமாக பேசினார்.
கடந்த 2008 ஜூலை 22ம் தேதி, பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த இரு மாதங்களாக வேகம் பிடித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன், இவ்வழக்கு தொடர்பாக அமர்சிங் கைது செய்யப்பட்டார். அமர்சிங்குடன் பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் பகன்சின் குலஸ்தே, மகாவீர் பகோடியா ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று பார்லிமென்டில் இந்தப் பிரச்னையை பா.ஜ., கிளப்பியது. கேள்வி நேரம் துவங்கியதுமே, லோக்சபாவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி எழுந்து, பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென்று கேட்டார். இதையடுத்து, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டு, சபை மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து கூடியது.
அப்போது அத்வானி பேச அழைக்கப்பட்டு அவர் பேசியதாவது: கடந்த 2008ல் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த நேரத்தில், இந்த சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தவன் நான். அந்த ஓட்டெடுப்பில் அரசாங்கத்திற்கு சாதகமாக ஓட்டுப்போடுவதற்கு, நிறைய காரியங்கள் மறைமுகமாக நடைபெற்றன. எம்.பி.,க்கள் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டனர். அந்த முறைகேட்டை அம்பலப்படுத்தும் நோக்கில், எங்கள் கட்சியின் எம்.பி.,க்கள் இருவர் என்னிடம் வந்தனர். பெரிய அளவில் லஞ்சம் அளிக்கப்பட்டு விலை பேச முயற்சி நடப்பதாகவும், இதை வெளிக்கொண்டு வருவது அவசியம் என்பது குறித்தும் என்னிடம் ஆலோசனை நடத்தினர். அரசாங்கத்தை நடத்துவதற்கே லஞ்சம் அளிக்கப்படுகிறது என்பதை, நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியாக வேண்டுமென்று முடிவுக்கு வந்தோம். அவர்களுக்கு நான்தான் அனுமதியை வழங்கினேன். அவர்கள் தவறாக நடக்க முயற்சித்து இருந்தால், நான் அனுமதி வழங்கி இருக்க மாட்டேன். அரசாங்கத்தில் எந்தளவுக்கு ஊழல் நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் நோக்கில்தான், அவர்கள் செயல்பட்டனர். ஆனால், இப்போது அவர்களும் கிரிமினல்கள் போல ஜோடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்திருப்பது உண்மையில் மக்கள் சேவை. இந்த நாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் சேவை செய்துள்ளனர். மக்களிடம் உண்மை போய் சேருவதற்கு உதவி செய்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு கிடைத்த பரிசு சிறைவாசம். அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, லஞ்சம் பெற்றுக் கொண்டு ஓட்டுப்போட்டவர்கள் எல்லாம் இப்போதும் இந்த சபையில் என் கண் முன்னால் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், தாங்கள் வாங்கிய பணத்தை சபையில் ஒப்படைத்த காரியத்தை செய்து, லஞ்ச முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த முன்னாள் எம்.பி.,க்கள் இருவரும் சிறையில் உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உண்மையில் நான்தான் அவர்களுக்கு அனுமதி வழங்கினேன். அவர்கள் குற்றவாளிகள் என்றால், அவர்களுக்கு அனுமதி அளித்த நானும் குற்றவாளியே. நானும் தண்டிக்கப்பட வேண்டியவன். எனவே என்னையும் கைது செய்யுங்கள். இவ்வாறு அத்வானி பேசினார். எப்போதும் போல இல்லாமல், நேற்று மிகவும் ஆவேசமாகவும், உணர்ச்சிப்பெருக்கோடும் அத்வானி பேசியதை காண முடிந்தது. இருந்தாலும், அவரை பேசவிடாமல் தொடர்ந்து ஆளும் தரப்பு எம்.பி.,க்கள் கூச்சலிட்டபடி இருந்தனர். இதனால், சபையில் அமளி நிலவியது. இதையடுத்து, சபையை மதியம் வரை ஒத்திவைக்க நேர்ந்தது. பின்னர், சபைக்கு வெளியில் வந்த அத்வானி உள்ளிட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும், அங்குள்ள காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். கோஷங்களும் எழுப்பினர். சிறைக்குள் தள்ளப்பட்ட முன்னாள் எம்.பி.,க்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமென்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பேசிய அத்வானி, ""பார்லிமென்டில் ஓட்டுக்கு லஞ்சம் அளித்த விவகாரத்தை இனி வேகமாக கொண்டு செல்ல வேண்டும். இவ்விஷயத்தை மக்களிடம் எடுத்துச் சென்றாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் யாத்திரை செல்வது என, முடிவெடுத்துள்ளேன்' என்றார்.



Share/Bookmark

1 comment:

  1. எப்போதோ சிறையிலடைக்கப் பட்டிருக்க வேண்டிய பொய் பேசி !
    இன்னும் நாடகமாடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா வெறியர்,
    ஆனால் ஆர் எஸ் எஸ் இவரை மதிக்காது. இவர் பார்ப்பனரல்லர்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...