மூன்றாம் கண்.,: இந்திய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி: பறிபோனது "நம்பர்-1'

Pages

Saturday, August 13, 2011

இந்திய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி: பறிபோனது "நம்பர்-1'


இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. டெஸ்ட் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, சர்வதேச தரவரிசையில் "நம்பர்-1' இடத்தை பெறுகிறது.


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 710 ரன்கள் குவித்து "டிக்ளேர்' செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் அதிர்ச்சி:இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன், மேலும் ரன் எதுவும் எடுக்காத நிலையில் காம்பிர் (14), டிராவிட் (18) பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தனர். லட்சுமண் (2), ரெய்னா (10) நிலைக்கவில்லை. சற்று நம்பிக்கையுடன் காணப்பட்ட சச்சின், ஆண்டர்சன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இவர் (40) பரிதாபமாக ரன் அவுட்டானார். தோனி ஆறுதல்:அமித் மிஸ்ரா, 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். 18 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்தநிலையில், பிரவீண் குமார், பிராட்டின் "ஷார்ட் பிட்ச்' பந்தில் வீழ்ந்தார். தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் கடந்தார். அம்பயரின் தவறான தீர்ப்பில் இஷாந்த் சர்மா, "டக்' அவுட்டானார். கடைசியில் ஸ்ரீசாந்த்தும் (5) அவுட்டாக, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி (74) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகன் விருது இங்கிலாந்து அணியின் குக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது."நம்பர்-1' உறுதி:இதையடுத்து ஒரு டெஸ்ட் மீதமுள்ள நிலையில், 3-0 என்று தொடரை வென்றுள்ள இங்கிலாந்து அணி, விரைவில் அறிவிக்கப்படும் புதிய "ரேங்கிங்' பட்டியலில் முதலிடத்தை பெறுவது உறுதியானது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...