மூன்றாம் கண்.,: நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Pages

Tuesday, August 9, 2011

நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு




தமிழகத்தில் நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை 10 நாட்களில் மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமாக இல்லை என்பதால் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் 76 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌகான் அடங்கிய பெஞ்ச் செவ்வாய்க்கிழமை காலை வழங்கினர்.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை அங்கீகரிப்பதற்கான 25 காரணங்களை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு விவரம்: அனைத்து மாணவர்களும் சமமான கல்வியைப் பயில வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறை எப்போது அமலுக்குக் கொண்டு வரப்படும் என்று 2010-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதைச் சரிசெய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

தமிழகத்தில் உள்ள 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் எந்தப் பாடப் புத்தகங்களைப் படிப்பது என்று குழப்பத்தில் உள்ளனர். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி முக்கியமானது. அதை வியாபாரமாக்கவிடக் கூடாது. இதைத் தவிர்க்கும் முயற்சியை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்க முயலும் தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை. சமச்சீர்க் கல்வி தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்த மசோதா தேவையற்றது. உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கல்வி அமைப்புகள் முறையிட்டதை அரசு ஊக்குவித்திருக்கக் கூடாது. புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சிட அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் முந்தைய அரசின் திட்டத்துக்குத் தடை விதிக்க அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. சமச்சீர் கல்விக்கு இந்த ஆண்டு தடைவிதிப்பதற்குத் தேவையான காரணங்களைத் தற்போதைய அரசு அளிக்கவில்லை.

சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு அமல்படுத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள தமிழக கல்வித் துறை செயலாளரை நிபுணர் குழுவில் இடம் பெறச் செய்தது தேவையற்றது.

தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவினர் சமச்சீர் பாடப் புத்தகங்களை நிராகரிக்கவில்லை. அதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் தங்கள் புகழையும் தத்துவங்களையும், அரசியல் புகழையும் மாணவர்களிடையே பரப்பிக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற ஆட்சேபத்துக்கு உரிய பகுதிகளை அரசு தற்போது நீக்கி விடலாம். இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சமச்சீர் கல்வி தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை 10 நாட்களில் செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...