மூன்றாம் கண்.,: 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு

Pages

Tuesday, August 30, 2011

3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு


கவர்னர், ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கோ,
நிறுத்தி வைப்பதற்கோ எனக்கு அதிகாரம் இல்லை,'' என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அளித்த அறிக்கை:முன்னாள் பிரதமர் ராஜிவ், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது, படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர்கள், சுப்ரீம் கோர்ட் வரை சென்று மேல்முறையீடு செய்ததில், நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மேலும் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது.பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து, நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டில் முதல்வராக இருந்த இதே கருணாநிதி தான், தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும், தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளார். அன்றைய முதல்வர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை, அன்றைய கவர்னரும் ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையின் அறிவுரைப்படி கவர்னரால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின் ஜனாதிபதியாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எவ்வித அதிகாரமும், முதல்வராகிய எனக்கு இல்லை. எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை, அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம்.இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சி வயப்பட்டு இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...