மூன்றாம் கண்.,: பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்: 144 தடை:ஐந்து பேர் பலி

Pages

Sunday, September 11, 2011

பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்: 144 தடை:ஐந்து பேர் பலிதமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கலவரம் வெடித்தது.

இதில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், சென்னை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன் உட்பட அதிகாரிகள் தாக்கப்பட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து, அஞ்சலி செலுத்த வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வருகையை எதிர்பார்த்து, பரமக்குடியில் பலர் காத்திருந்தனர்.தூத்துக்குடியில், பகல் 12 மணிக்கு ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததும், அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை, மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை.அந்தக் கும்பலில் இருந்த ஒருவர், செந்தில்வேலன் சட்டையைப் பிடித்து இழுத்தார். பதிலுக்கு, செந்தில்வேலன் கையை ஓங்கினார்.இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், பதட்டம் ஏற்பட்டு, பின் கலவரமாக மாறியது. இதில், சிதறி ஓடிய சிலர், பரமக்குடி டி.எஸ்.பி., கணேசனை கீழே தள்ளிவிட்டனர். விழுந்த அவர் தலை மீது, ஒரு கும்பல் பெரிய கல்லைப் போட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டது. தலையில் காயமடைந்த கணேசனை, அங்கிருந்த போலீசார் பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். பல இடங்களில் இருந்து, பலர் கற்களை வீசியதில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், எஸ்.பி., செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர். காயத்தால் சுயநினைவை இழந்த சந்தீப் மிட்டல், மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கலவரம் பெரிதானதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த, வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனம் கொண்டு வந்தனர். கலவரக்காரர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்ததால், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

சிதறி ஓடிய கும்பல், பல இடங்களில் இருந்து, போலீசார் மீது கற்களை வீசியதுடன், அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தது. இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஓட்டப்பாலம், ஜெயபால், 20. பரமக்குடி, காந்திநகர், பன்னீர்செல்வம், 50. பரமக்குடி, கணேசன். கீழகொடுமனூர் தீர்ப்பு கனி, 25, உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், பரமக்குடி மெயின் ரோடு உட்பட, பல பகுதிகளில், கலவரம் தொடர்ந்தது. தீயணைப்பு வண்டியும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, பரமக்குடி ஸ்தம்பித்தது. பரமக்குடியின் நான்கு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மதுரை - ராமேஸ்வரம் சென்ற வாகனங்கள், சிவகங்கை, திருவாடனை, ராமநாதபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன. நேற்று மாலை 4 மணி வரை தொடர்ந்த கலவரத்தில், ரோட்டில் நடமாடியவர்கள், உயிருக்குப் பயந்து ஓடி, அருகேயிருந்த வீடுகளில் தஞ்சமடைந்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். காயமடைந்த போலீசார், சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரமக்குடியில், ஆங்காங்கே அரசு டவுன் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.பரமக்குடி சம்பவத்தைத் தொடர்ந்து, முதுகுளத்தூரில் கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை தவிர, பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பரமக்குடி தாலுகாவில், நேற்று மாலை 4 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனையில்போலீசார்: பரமக்குடி கலவரத்தில் காயமடைந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையிலும், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் மதுரை பிரித்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் முனியசாமி, மணியன், பூமிநாதன், டெய்சி நிர்மலா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண் போலீஸ்மானபங்கம்:பரமக்குடியில் நடந்த கலவரத்தில், பெண் போலீஸ் டெய்சி, மானபங்கம் செய்யப்பட்டார். ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்கள் நிறுத்தப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், போலீசார் பற்றாக்குறையால், நேற்று நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரக்காரர்கள், பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள ரயில்வே சிக்னல்களையும், ரயில்வே கேட்டையும் உடைத்தனர். கேட்-கீப்பர் அறையையும் தாக்கி நொறுக்கினர். இதையடுத்து, ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான ஐந்து பேர்:மொபைல் போன் மூலம் அடையாளம் தெரிந்தது:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று நடந்த கலவரத்தில் இறந்த நால்வர் அடையாளம் தெரிந்தது; மற்றொருவர் விவரம் தெரியவில்லை. பரமக்குடி கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஐந்து பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் மூன்று பேரின் உடல்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. இருவரது பையிலிருந்த மொபைல் போன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.இதைக் கேட்ட ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன், போன்களில் பேசியவர்களிடம் கேட்ட போது, ஒருவர் பரமக்குடி ஓட்டப்பாலத்தைச் சேர்ந்த ஜெயபால், 20. இவர், ஒரு மாதத்திற்கு முன் கலப்புத் திருமணம் செய்தவர் என்றும், மற்றொருவர், பரமக்குடி காந்திநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 50, என்றும் மூன்றாவது நபர் பரமக்குடியைச் சேர்ந்த கணேசன் என்றும் தெரியவந்துள்ளது.

குண்டு காயமடைந்தவர்களில் எட்டு பேர், இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், தலையில் குண்டு காயத்துடன் இருந்த பரமக்குடி அருகேயுள்ள கீழகொடுமனூரைச் சேர்ந்த தீர்ப்பு கனி, 25, பலியானார்.அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் குண்டு காயத்துடன் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் பலியானார். இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இவரையும் சேர்த்து, துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.Share/Bookmark

1 comment:

  1. நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...