மூன்றாம் கண்.,: கே.என்.நேருவின் தம்பி கைது

Pages

Monday, September 5, 2011

கே.என்.நேருவின் தம்பி கைது


நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக திருச்சி போலீசாரால் தேடப்பட்டு வந்த மாஜி திமுக மந்திரி கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது இன்று கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை திருச்சிக்கு கொண்டுவர போலீசார் விரைந்திருக்கிறார்கள்.திருச்சியில் அண்ணா அறிவாலயம் கட்ட தனியார் ஒருவரின் நிலத்தை மிரட்டி அபகரித்ததாக புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து மாஜி திமுக அமைச்சர் கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கே.என்.நேரு, திருச்சியை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், முக்கியமாக தேடப்பட்ட கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் தலைமறைவாகி விட்டார். விசாரித்த போது அவர் வெளிநாடு ஒன்றில் தங்கியிருப்பதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவரை பற்றிய தகவல்களை அனைத்து மாநிலங்களுக்கும் தமிழக போலீசார் அனுப்பி வைத்தனர். முக்கிய வழக்கில் அவர் தேடப்படுவதால் அவரை கண்டால் கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். துபாயில் தங்கியிருந்த ராமஜெயம் அண்மையில் இந்தியா திரும்பி இருக்கிறார். ஆனால் தன்னை திருச்சி போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகவே இருந்தார். தமிழக போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு அவர் சென்றார். கொச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்பியோட அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய பாஸ்போர்ட்டை பார்த்ததும் குடியேற்ற அதிகாரிகள் உஷார் அடைந்தனர். அவர் மீது வழக்கு இருப்பதால் வெளிநாடு செல்ல இயலாது என்று தெரிவித்த குடியேற்ற அதிகாரிகள் அவரை தனி அறையில் உட்கார வைத்து விட்டு திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைக்கும்படி திருச்சி போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள நெடுமஞ்சேரி காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராமஜெயத்தை கைது செய்து திருச்சிக்கு கொண்டுவர திருச்சி நகர போலீசார் கொச்சிக்கு விரைந்திருக்கிறார்கள். அண்ணா அறிவாலய நில அபகரிப்பு வழக்கு மட்டுமின்றி காஞ்சனா ஓட்டல் அபகரிப்பு வழக்கிலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சி காலத்தில் அதிக விலை மதிப்புள்ள நில பரிமாற்றங்கள் குறித்து ராமஜெயத்திற்கு தகவல் தெரிவித்த பின்னரே பதிவு செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி பத்திரபதிவு அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு தெரியாமல் நிலங்கள் விற்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நிலங்களை விற்க நினைப்பவர்களிடம் மிககுறைந்த விலைக்கே நிலங்களை வலுக்கட்டாயமாக அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...