மூன்றாம் கண்.,: சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க அரசு எதிர்ப்பு

Pages

Tuesday, September 27, 2011

சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க அரசு எதிர்ப்பு


2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தது.


2ஜி வழக்கில் சிதம்பரத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.

சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ் வாதிட்டார்.

மத்திய அரசுக்கு சிபிஐ மறுப்பு: சிபிஐ சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். சுப்பிரமணியன் சுவாமி சார்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதற்கு வேணுகோபால் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

"சிபிஐ என்பது தன்னாட்சி பெற்ற, சுயேச்சையான அமைப்பு' என்று அவர் கூறிய அவர், "என்ன செய்ய வேண்டும் என்பதில் யாரும் சிபிஐயை நிர்பந்திக்க முடியாது' என்றார்.  "சிதம்பரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சிபிஐ ஈடுபடுவது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் உருவாக்கியிருக்கின்றன' என்று அவர் குறைகூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மத்திய அரசு கூறியபடி சிபிஐ செய்யப்போவதில்லை என்று கூறுகிறீர்கள். இதிலிருந்து எங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டது' என்றனர்.

சுப்பிரமணியன் சுவாமி வாதம்: சிறப்பு நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாம் தாக்கல் செய்திருக்கும் மனுக்களுக்கு இடையேயான வித்தியாசத்தை சுப்பிரமணியன் சுவாமி விளக்கினார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் விசாரணை நீதிமன்றத்துக்கு இல்லை என்பதாலேயே உச்ச நீதிமன்றத்தை தாம் அணுகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கண்காணிப்பு வேண்டாம்: 2ஜி வழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கைக் கண்காணிப்பதை உச்ச நீதிமன்றம் முடித்துக் கொள்ள வேண்டும். வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திடமும் சிபிஐயிடமும் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரப்பட்டது. "சிபிஐ தனது கடமையைச் செய்யாது என்று நம்புவதற்கு இடமில்லை' என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான பி.பி.ராவ் கூறினார். "நான் எந்த ஒரு தனி நபருக்காகவும் ஆஜராகவில்லை. மத்திய அரசுக்காகத்தான் ஆஜராகியுள்ளேன்' என்று அவர் விளக்கமளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைப் போன்ற சுப்பிரமணியன் சுவாமியின் மற்றொரு மனு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன் நிலுவையில் இருக்கிறது. அதன் மீது உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று ராவ் வாதிட்டார். எனினும் 2ஜி ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சில நிறுவனங்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்த வேறு இரு வழக்குகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குறையான விசாரணை: 2ஜி வழக்கில் ஒரு அம்சத்தை விசாரிக்கும் சிபிஐ மற்றொரு அம்சத்தை விசாரிக்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். "2ஜி முறைகேடுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. ப.சிதம்பரத்துக்குத் தெரிந்தே குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நான் தாக்கல் செய்திருக்கிறேன். இந்த வழக்கைப் பொருத்தவரை ராசாவுக் கும் சிதம்பரத்துக்கும் ஒரே மாதிரியான நோக்கமே இருந்திருக்கிறது' என்று அவர் வாதிட்டார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...