மூன்றாம் கண்.,: தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

Pages

Thursday, June 2, 2011

தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:




தி.மு.க., ஆட்சியில் இலவச திட்டங்ளை செயல்படுத்தியபோது, கண்டனக் கணைகளைப் பொழிந்தோர், தற்போது இலவச அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கிய ஜெயலலிதாவைப் போற்றுகின்றனர்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர்
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் இலவச திட்டங்களை நிறைவேற்றியபோது, மக்களை சோம்பேறிகளாக்குகிறார் என எதிர்கட்சிகளும், சில பத்திரிகைகளும் கண்டனக் கணைகளைப் பொழிந்தன. தற்போது, ஜெயலலிதா இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கியதைப் போற்றுகின்றனர். ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர், முதியோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு, மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து அரசுகளுக்கும் உண்டு. வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளிலும், இலவசக் கல்வி, முதியோர் பென்ஷன், வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை, உணவு கூப்பன், தேசிய சுகாதாரப் பாதுகாப்பு போன்ற திட்டங்கள் உள்ளன. தி.மு.க., ஆட்சியின்போது, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வேட்டி சேலை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கலாமா, என அதிகாரிகளுடன் ஆலோசித்தபோது, "ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என வழங்கும்போதே எதிர்கட்சிகள் கண்டித்து பேசுகின்றன. இலவசமாக அரிசி வழங்குவது நல்லதல்ல' எனக் கருத்து தெரிவித்தனர். இலவச சமையல் எரிவாயு திட்டம், இலவச கலர் "டிவி' வழங்கும் திட்டம் போன்றவை தி.மு.க., அரசால் செயல்படுத்தப்பட்டன. இவற்றை கண்டித்து பேசியவர்கள், தற்போது அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளனர். இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், "108' ஆம்புலன்ஸ் திட்டம் போன்றவற்றை அ.தி.மு.க., அரசு அதே வேகத்தோடு நடத்தப் போகிறதா? அல்லது தலைமைச் செயலகம், தமிழ் செம்மொழி மையம், சமச்சீர் கல்வித்திட்டம் ஆகியவற்றைப் போல் நிறுத்தப் போகிறதா, என்பது இனிமேல்தான் தெரியும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, வளர்ச்சி திட்டங்களை மட்டும் ஒரு அரசு செயல்படுத்தினால், அந்த அரசு ஏழை எளிய மக்களின் நலனைப் புறக்கணிக்கும் அரசாகவே இருக்கும். இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...