மூன்றாம் கண்.,: தொலைத்தொடர்புத்துறை ஊழியர்களை மிரட்டி செயல்பட வைத்தார். அமைச்சர் ஆ.ராசா என்று சி.பி.ஐ. குற்றச்சாட்டு

Pages

Thursday, June 9, 2011

தொலைத்தொடர்புத்துறை ஊழியர்களை மிரட்டி செயல்பட வைத்தார். அமைச்சர் ஆ.ராசா என்று சி.பி.ஐ. குற்றச்சாட்டு




டாடா குழும நிறுவனங்களைவிட ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கே சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை

ஊழியர்களை மிரட்டியும் எச்சரித்தும் செயல்பட வைத்தார் அப்போதைய அமைச்சர் ஆ.ராசா என்று சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டை கூறியிருக்கிறது. பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது. தில்லியில் நடைபெறும் இந்த விசாரணையில் சி.பி.ஐ. பங்கேற்று இதுவரை தான் விசாரித்த, திரட்டிய தகவல்களை குழுவிடம் தெரிவித்து வருகிறது.சி.பி.ஐ. (மத்தியப் புலனாய்வுக் கழகம்) அமைப்பின் தலைவரான இயக்குநர் ஏ.பி. சிங், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார் .ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய  நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்; டாடா குழுமத்துக்கு அல்ல என்று தொலைத் தொடர்புத் துறையின் பிற ஊழியர்களை அப்போதைய அமைச்சர் ஆ.ராசாவும் அவருடைய துறைச் செயலாளர் சித்தார்த்த பெகுராவும் ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியாவும் மிரட்டியும் எச்சரித்தும் காரியம் சாதித்ததாக ஏ.பி. சிங் தெரிவித்தார். வயர்லெஸ் உரிமம் வழங்குவதற்கான ஆலோசகர் ஆர்.பி. அகர்வாலை மிரட்டியும் நிர்பந்தப்படுத்தியும் தில்லி சர்க்கிளில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கே உரிமம் வழங்க வேண்டும் என்ற குறிப்பை அவர் மூலம் பெற்றனர் என்று சிங் தெரிவித்தார். டாடா நிறுவனம்: டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டி.டி.எஸ்.எல்.) என்ற நிறுவனம் 20 சர்க்கிள்களில் இரட்டைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த தொலைத் தொடர்புத் துறையின் கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்றிருந்தது. 2008 ஜனவரி 10-ம் தேதி அதற்கான அனுமதிக் கடிதத்தையும் அது பெற்றது.துறை விதித்த நிபந்தனை களை யெல்லாம் பூர்த்தி செய்த டாடா குழுமம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வயர்லெஸ் பிரிவிடம் (திட்டமிடல், ஒருங்கிணைத்தல்) மனுச் செய்தது. ஆனால் அந்த மனு தொலைத் தகவல் தொடர்புத்துறையில் எங்கோ காணாமல் போய்விட்டது. டாடா குழுமத்திலிருந்து துறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, புதிதாக மனு அளிக்குமாறு 2008 மார்ச் 5-ம் தேதி கூறப்பட்டது. ஆனால் அதற்குள் ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் அளிக்கப்பட்டுவிட்டன என்று கூட்டுக்குழுவிடம் தெரிவித்தார் ஏ.பி. சிங். ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் இடையிலான உறவு குறித்தும் சில தகவல்களை அவர் அளித்தார். அனில் அம்பானி தலைமையிலான நிறுவனத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாக அல்லாமல் திரைமறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து தெரிவிக்க ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பத்திரிகைத் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...