மூன்றாம் கண்.,: தன்னைக் கொல்ல போலீஸார் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டினார்

Pages

Sunday, June 26, 2011

தன்னைக் கொல்ல போலீஸார் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டினார்
தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னைக் கொல்ல போலீஸார் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தின்போது போலீஸ் தடியடியில் காயமடைந்து தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜ்பாலாவை (51), அவர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்த்தார். ஹரித்வாரில் இருந்து காரில் தில்லி வந்த அவர் நேராக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் ராஜ்பாலாவை பார்க்க சிறிது நேரம் மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உறவினர்களைச் சந்தித்த ராம்தேவ், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலீஸ் தடியடியில் ராஜ்பாலா உயிர் பிழைத்தது அதிசயம். அவர் மீது தடியடி நடத்தவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர். அப்படியென்றால் அவரைத் தாக்கியது யார்? இப்போது அவருக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் குணமடைந்தாலும் அவரால் நடக்க முடியாது.
நான் சட்டவிரோதமாக செயல்படுகிறேன் என்றால் பிரதமர், எனக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும். விமான நிலையத்தில், 4 மத்திய அமைச்சர்கள் என்னைச் சந்தித்துப் பேச வந்தது ஏன்?  ராம்லீலா மைதானத்தில் போலீஸார் என்னைக் கைது செய்ய வரவில்லை. என்னைக் கொலை செய்யவே அவர்கள் விரும்பினார்கள். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதற்கான ஆதாரங்களை இப்போது வெளியிட முடியாது. நான் அமர்ந்திருந்த மேடையை தீ வைத்துக் கொளுத்தினார்கள். அதை அணைக்க முயன்ற எனது ஆதரவாளர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி விரட்டினார்கள். தீயில் நான் சிக்கிக் கொள்ளவே போலீஸார் முயற்சி மேற்கொண்டார்கள்.
ராம்லீலா மைதானத்தில் நடந்தது ஜனநாயகப் படுகொலை. போலீஸ் நடவடிக்கையின்போது குடிபோதையில் இருந்த சிலர், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றனர். நான் பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன் இல்லை. எந்த அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பில்லை. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு விருப்பம் இல்லை. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு விரும்பவே இல்லை. கறுப்புப் பணம், ஊழல் விவகாரங்கள் குறித்து யார் பிரச்னை எழுப்பினாலும் அவர்களை ஓரங்கட்டவே மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று அவர் தெரிவித்தார். லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக தில்லியில் ஆகஸ்ட் 16 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கும் அண்ணா ஹசாரேவுடன் பங்கேற்பீர்களா என்ற செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை.கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி தில்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். அதைத் தொடர்ந்து தில்லியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ராம்தேவ், தில்லியில் நுழைய 15 நாள்கள் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் இப்போது அவர் தில்லி வந்துள்ளார்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...