மூன்றாம் கண்.,: சீட்டுக்காக கையேந்த வேண்டாம் ராமதாஸ் அறிவுரை

Pages

Wednesday, June 29, 2011

சீட்டுக்காக கையேந்த வேண்டாம் ராமதாஸ் அறிவுரை
சீட்டுக்காக இனி யாரிடமும் கையேந்த வேண்டாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியார் ஒளி விருது தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகனுக்கும், அம்பேத்கர் சுடர் விருது பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸýக்கும், காயிதே மில்லத் பிறை விருது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் காதர் மைதீனுக்கும், காமராஜர் கதிர் விருது பத்திரிகையாளர் சோலைக்கும், செம்மொழி ஞாயிறு விருது கவிஞர் தணிகைச்செல்வனுக்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது மறைந்த மு. சுந்தரராசனுக்கும் அளிக்கப்பட்டது. சுந்தரராசனுக்கான விருதை அவரது சகோதரர் சின்னப்பன் பெற்றுக்கொண்டார். விருதுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார். விருதுகளுடன் 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டன. க. அன்பழகன் 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியை தாய்மண் அறக்கட்டளைக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். கூட்டத்தில் ராமதாஸ் பேசியது: அம்பேத்கரின் தாரக மந்திரம் கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்பதாகும். ஆனால் இந்த மூன்றையுமே நாம் மறந்துவிட்டோம். திருமாவளவன் ஏன் கான்ஷிராம்போல, மாயாவதிபோல தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. எதற்காக 7 சீட்டு, 8 சீட்டுக்காக மற்றவர்கள் பின்னால் செல்ல வேண்டும். இனி நாம் எங்கும் செல்லத் தேவையில்லை. யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. சேர்ந்து போராடுவோம் என்றார். க.அன்பழகன்: தமிழர்களை மனிதராக மாற்றியவர் என்றால் அந்தப் பெருமை பெரியாரையே சாரும். திருமாவளவன், ராமதாஸ் போன்றோர் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியார் கொள்கையே காரணம். தேர்தலில் தோல்வி என்பது சகஜம். போட்டிருக்கும் சட்டை கிழிந்துவிடுவதுபோல. புதிய சட்டை போட்டுக் கொள்ளலாம். தேர்தலில் தோற்றாலும் சமுதாயப் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும். அதில் தொய்வு இருக்கக் கூடாது என்றார் அன்பழகன் தொல். திருமாவளவன்: ஆடு, மாடுகளை இலவசமாகக் கொடுத்து மீண்டும் மக்களை ஆடு, மாடு மேய்க்கச் சொல்லச் சொல்கிறார்களா? கல்வியைத் தவிர வேறு எந்த இலவசங்கள் கொடுத்தாலும் நாம் எதிர்க்க வேண்டும். சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றார் அவர். விழாவில் கட்சியில் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், ஓவியர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...