மூன்றாம் கண்.,: கச்சத்தீவுபகுதியில் இலங்கை கப்பல்படை தொடர்ந்து அட்டூழியம்

Pages

Sunday, June 26, 2011

கச்சத்தீவுபகுதியில் இலங்கை கப்பல்படை தொடர்ந்து அட்டூழியம்




கச்சத்தீவுபகுதியில் இலங்கை கப்பல்படை தொடர்ந்து அட்டூழியம் செய்வதால் கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள் மீது
இலங்கை கப்பல்படையினர் ஆயுதங்களால் தாக்குவதும் மீன்களை கடலில் கொட்டுவதுமாக பல்வேறு இன்னல்களை தந்து வந்தனர். தமிழக மீனவர்கள் பொறுமை காத்து வந்தநிலையில் மாநில அரசு மத்திய அரசிடம் மீனவர்களை காப்பாற்ற வேண்டி வேண்டுகோள் விடுத்து வந்தது.ஆனால் மீனவர்கள் பிரச்னையை யாரும் முக்கியமானதாக கருதவில்லை. சமீபத்தில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கைது செய்து தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கப்பல் படை அனுராதாபுரத்தில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.தொடர்ந்து மத்திய அரசின் தலையீட்டால் நாளை(திங்கட்கிழமை) விடுதலைசெய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கப்பல்படை, மீனவர்களை விரட்டியடித்தது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ., தூரத்திலும், ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது. இத்தீவு 1882ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதியிடம் இருந்தது. 1955-56ல் இலங்கை கச்சத்தீவில் தனது கடற்படைக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தது. ஜே.வி.பி., என்ற சிங்கள அமைப்பு, இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரத்துக்காக, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க இந்தியா கொள்கை அளவில் முடிவு எடுத்தது. கடந்த 1974ல் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்த மத்திய அரசு, அதற்கான நிபந்தனைகளையும் விதித்தது. அதில் இந்திய மீனவர்கள் அங்குள்ள கோயில் திருவிழாவுக்கு தடையின்றி வந்து செல்லவும், படகுகளை நிறுத்தி வலைகளை உலர்த்தவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. கச்சத்தீவுக்கு நடுவிலுள்ள கல்லுமலை அருகே ஆழ்கிணற்றின் குடிநீரால் ராமேஸ்வரத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம். கச்சத்தீவு கடலில் கிடைக்கும் இறால்கள் உலகத்தரம் வாய்ந்தவை. கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நூற்றாண்டுக்கு தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு-குமரி முனைக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற உயர்ரக தனிமங்கள் உள்ளன. நீர்மூழ்கி கப்பல்களையும், போர் படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கு தகுதி வாய்ந்த இடமாக கச்சத்தீவு விளங்குகிறது. தற்காலிகமாக இவற்றை இழந்து நிற்கும் நாம், இவற்றை நிரந்தரமாக இழப்பதற்கு முன் கச்சத்தீவை மீண்டும் பெற முன் வர வேண்டும். பிலிப்பைன்ஸ் எல்லையிலுள்ள "பால்மஸ் மியான்ஜஸ்' என்னும் தீவு நெதர்லாந்துக்கு சொந்தமானது. அந்த தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர் அதை பிரெஞ்சுக்கு தாரை வார்த்தது. ஆனால் நெதர்லாந்து மக்கள், உலக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இழந்த உரிமையை பெற்றனர். அதுபோல் கச்சத்தீவு உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக்கூடாது. கச்சத்தீவு, எண்ணற்ற இயற்கை வளங்களை கொண்டது. அதை பெறுவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...