மூன்றாம் கண்.,: கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் சீமான் வரவேற்பு

Pages

Thursday, June 9, 2011

கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் சீமான் வரவேற்பு




கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறையையும் சேர்க்க
வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டு மீனவர்கள் நலனிற்கு எதிராகவும், இந்திய அரசமைப்பிற்கு முற்றிலும் முரணாகவும் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீ்ட்க வேண்டும் என்று கோரி 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் ஒரு வாதியாக சேர்ப்பது என்று தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.கடந்த 1974-ம் ஆண்டு இந்திய-இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்ததம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நமது நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை மறைமுகமாக இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இலங்கையுடன் நட்புறவு கொள்வதற்காக அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய (தமிழக) மீனவர்களின் வாழ்வுரிமைக்கு எதிராகவும், அவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையையும் கச்சத் தீவுடன் சேர்த்து இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.இந்திய அரசின் இந்த நடவடிக்கையை அப்போதே நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் கண்டித்து பேசியதற்குப் பதிலளித்த (அன்றைய) வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங், கச்சத் தீவு யாருக்குச் சொந்தமாக இருந்தது என்பதில் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே ஒரு சர்ச்சைக்குரியதாகவே இருந்துவந்து என்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரியதாக இருந்த ஒரு தீவை, இலங்கையுடன் நட்புறவு கொள்ளும் பொருட்டு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். இரா.செழியன், நாஞ்சி்ல் மனோகரன், அன்றைய இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.கே.மூக்கையாத் தேவர், அவருக்கு முன் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முகமது செரீஃப் ஆகியோர் கச்சத் தீவு சர்ச்சைக்குரியது என்பதை கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமல் இநதிய, இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தினால் தான் இன்று வரை தமிழக மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும்பொருட்டு அதிமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தமிழக வருவாய்த் துறையை ஒரு வாதியாக சேர்ப்பது என்பது மிகவும் அவசியமான, சரியான முடிவாகும். ஏனெனில் தமிழக வருவாய் துறையிடம் கச்சத் தீவு சேதுபதி ஜமீனிற்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் உள்ளது. குறிப்பாக 1972-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் (Ramanadhapuram Gazetteer) பக்கம் 30-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: இராமேஸ்வரத்திலிருந்து வட கிழக்காக 10 மைல்கள் தூரத்தில் கச்சத் தீவு உள்ளது. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்பு வரை பல தனியாருக்கு அந்தத் தீவை இராமநாதபுரம் இராஜா குத்தகைக்கு விட்டுள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் அங்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கடல் நீர் கலங்கலாக இருப்பதால் அத்தீவுற்கு கச்சத் தீவு என்ற பெயர் ஏற்பட்டது.
285.20 ஏக்கர் பரப்பளவு உள்ள கச்சத் தீவின் நில ஆய்வு (சர்வே) எண்: 1250. அங்கு ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அதனை தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் தான் சென்று பிரார்த்தனை நடத்துகிறார். இராமேஸ்வரம் கர்னத்திற்கு கட்டுப்பட்ட பகுதியாகத் தான் கச்சத் தீவு உள்ளதுஎன்று தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் கூறுகிறது. ஆனால் இந்த ஆவணத்தையும், கச்சத் தீவு பல நூற்றாண்டு காலமாக இராமநாதபுரம் ஜமீனிற்கு சொந்தமானது என்ற உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டுத்தான், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திய அரசு. எனவே, இந்த உண்மைகளை ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க வருவாய்த் துறையை ஒரு வாதியாக சேர்க்கும் முடிவு சட்ட ரீதீயாக மிகவும் சரியானது. நாம் தமிழர் கட்சி முழு மனதுடன் தமிழக அரசின் முடிவையும், தீர்மானத்தையும் வரவேற்கிறது. அதே நேரத்தில் கச்சத் தீவை நாம் மீட்க வேண்டும் என்று கூறுவதற்குக் காரணம், தமிழ்நாட்டு மீனவர்களின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, அந்தக் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு பெற்றிருந்த பாரம்பரிய மீன் பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே என்பதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கு கச்சத் தீவை மீ்ட்பது மட்டும் போதாது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீ்ன் பிடி உரிமையை விட்டுத்தந்த இந்திய-இலங்கை எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வதே சரியானதாக இருக்கும். ஒன்று கச்சத் தீவை மீட்கவும், இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையேல், இந்திய- இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கராரான நிலையெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.  இதையே நாம் தமிழர் கட்சி ஒரு கோரிக்கையாக தமிழக அரசிற்கும் முன் வைக்கிறது.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...