மூன்றாம் கண்.,: தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை

Pages

Friday, June 3, 2011

தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை


தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து அவரிடமோ அல்லது சி.பி.ஐ.,யிடமோ தான் விளக்கம் கேட்க வேண்டும். இதற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, அந்தக் கட்சியின் தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கோபமாகக்
கூறியுள்ளார். மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மலேசிய நிறுவனமான மேக்சிஸ்க்கு அவர் சலுகை காட்டியதாகவும், இதற்கு பிரதிபலனாக, சன் நெட்வொர்க் நிறுவனத்தில், அந்த நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காக உருவெடுத்திருப்பதால், தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி பங்கு என்ன என்று பிரதமர் விளக்கும் வகையில் தன் மவுனத்தைக் கலைக்க வேண்டும் என்று பா.ஜ., கூறியது. இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறன் பங்கு உள்ளது என, இ.கம்யூ., எம்.பி., ராஜா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழு தலைவருமான முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி நடப்பதற்கு முன்னதாகவே, தயாநிதி என்ன தவறு செய்தார் என்பதை பிரதமர் அலுவலகம் நன்கு அறியும். இருந்தாலும், யாரும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. தயாநிதி செய்த முறைகேடுகளுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங் முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடியே நடந்திருக்காது. அதை தடுத்திருக்கலாம். பொதுக் கணக்கு குழு பிரதமரிடம் சமர்ப்பித்த அறிக்கையில், "2ஜி' மோசடியில் தயாநிதியின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என, பரிந்துரை செய்திருந்தது. "2ஜி' மோசடியை துவக்கி வைத்தவரே தயாநிதி தான். அவரின் தூண்டுதலின் பேரில்தான்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அமைச்சர்கள் குழுவிடம் இருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு மாற்றப்பட்டது. பொது கணக்குக்குழு அறிக்கை சமர்ப்பித்தும், பிரதமர் மன்மோகன் சிங் மவுனமாக இருப்பது ஏன். அதுதான் புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார். இந்நிலையில், தன் 88வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், "பிறந்த நாள் அன்று, தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும், தங்களை ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள், "கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன்மொழியை மறந்து விடாமல், பணியாற்ற வேண்டும்' என்றார். "கூடா நட்பு' என, கருணாநிதி கூறியது காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்துதான் என்று செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அமைச்சர் தயாநிதி மீது, சில குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கு அவர்தான் பதில் அளிக்க வேண்டும். காங்கிரசும் - தி.மு.க.,வும் கூட்டணிக் கட்சிகள். அந்தக் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. தயாநிதி மீதான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தயாநிதியோ அல்லது சி.பி.ஐ.,யோதான் இதற்கு பதில் அளிக்க வேண்டும். அவர்களிடம்தான் நிருபர்கள் விளக்கம் கேட்க வேண்டும். பிறந்த நாளையொட்டி கருணாநிதிக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., எங்களுடைய நட்புக்கட்சி. அதற்கு, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடமிருந்து மத்திய அரசுக்கு, தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று இதுவரை ஏதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் - தி.மு.க., அரசியல் உறவுகள் தொடர்கிறது. இதில் எவ்வித மாறுதலும் இல்லை. இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார். மற்றொரு திருப்பமாக, பார்லிமென்ட் கூட்டுக்குழுத் தலைவர் சாக்கோ, "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, முன்பு இத்துறையின் அமைச்சராக இருந்த தயாநிதியிமும் விசாரணை நடத்துவோம்' என்றார்.





Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...