பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாகவும் தங்களது மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 7.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த விடைத்தாள்கள் திருத்தம், மதிப்பெண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் இந்தத் தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in, www.tnpubliclibraries.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் மே 11 முதல் 16 வரை விநியோகிக்கப்படுகின்றன. இதுபோல் விடைத்தாள் ஜெராக்ஸ் விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படும். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், புதுச்சேரி இணை இயக்குநர் (கல்வி) அலுவலகம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வு மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் (சென்னை தவிர) ஆகிய இடங்களில் இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படமாட்டாது. கட்டணம்: மறுகூட்டலுக்கான கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.305, இதரப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205வரைகட்டணம்வசூலிக்கப்படுகிறது.ஜெராக்ஸ்:விடைத்தாள் மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள்களை மீண்டும் பார்க்க விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகலுக்கு (ஜெராக்ஸ்) விண்ணப்பிக்கலாம். இதனைப் பெறுவதற்கு மொழிப் பாடம், ஆங்கிலத்துக்கு தலா ரூ.550, இதரப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275 கட்டணம் வசூலிக்கப்படும்.
சிறப்புத் துணைத் தேர்வு: பிளஸ் 2 தேர்வில் தவறியவர்களுக்காக துணைத் தேர்வு மே 22 முதல் ஜூன் 2 வரை நடைபெறுகிறது. தேர்வில் மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் அல்லது தேர்வு எழுதாதவர்கள் இந்த சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம்.
இதற்கான விண்ணப்பங்களை மே 9-ம் தேதி முதல் பெறலாம். தேர்வுக் கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்று பாடங்களுக்கு ரூ.185 ஆகும். தேர்வை பள்ளிகளின் மூலம் எழுதிய மாணவர்கள் துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்களை தங்களது பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். மே 13 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அன்று மாலைக்குள் பூர்த்திசெய்த விண்ணப்பங்களை அந்தந்தப் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும். தனித்தேர்வர்கள் துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்களை மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் மே 16 முதல் 20-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள், மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் மே 24-ம் தேதிக்குள் சேரும் வகையில் பதிவு அஞ்சலிலோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில்...: சைதாப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், எழும்பூர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகல், மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
No comments:
Post a Comment