யேமன் நாட்டு அரசாங்கப் படையினர் தலைநகர் சானாவில், சக்தி மிக்க பழங்குடியினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். நான்கு நாட்கள் நடந்த வன்செயல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பழங்குடியினத் தலைவரான
சாதிக் அல் அஹ்மர் அவர்களை கைது செய்யுமாறு அதிபர் அலி அப்துல்லாஹ் சாலி உத்தரவிட்டிருக்கிறார். உள்நாட்டுப் போரை தூண்டுவதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகிறார்கள். தான் பதவி விலகினால் சீர்குலைவு நிலை தொடரும் என்ற செய்தியை அதிபர் உலகெங்கும் அனுப்ப விழைகிறார் என்று சேக் அல் அஹ்மர் குற்றஞ்சாட்டியுள்ளார். வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சாலி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அமெரிக்காவும், பிரான்ஸும் புதிய கோரிக்கைகளை விடுத்துள்ளன. யேமனில் இருக்கும் இந்தியப் பிரஜைகளைப் பொறுத்தவரை, அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் ஏதும் பிரச்சினைகளில் சிக்கியிருப்பதாக எந்தத் தகவலும் தமக்கு வரவில்லை என்றும் இந்த மோதல் பகுதிகளிலிருந்து விலகியிருக்குமாறு இந்தியர்களுக்கு அதிகார பூர்வ அறிவுரை வழங்கியிருப்பதாகவும் யேமனுக்கான இந்திய தூதர் டாக்டர் ஹவுசப் சயீத் தெரிவித்தார். யேமனில் சுமார் 14,000 இந்தியப்பிரஜைகள் இருப்பதாகவும் அதில் பெரும்பாலோனோர், அதாவது சுமார் 9,000 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு அடுத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் (சுமார் 1500 பேர்) இருப்பார்கள் என்றும் அதையடுத்து ஆந்திரா பின்னர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். இவர்கள் பெரும்பாலும் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் என்றும் சிலர் பிற தொழில்களில் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இவர்களெல்லாம் எல்லாம் பரந்துபட்டு வசித்தாலும், மூன்று பகுதிகளில் கணிசமாக இருப்பதாக கூறிய இந்திய தூதர், தலைநகர் சானாவில் சுமார் 6,000 பேர் இருப்பதாகவும், அடுத்து ஏடன் மற்றும் ஹொதேதா அந்தாய் பகுதிகளில் இந்தியர்கள் செறிந்து வாழ்வதாக தெரிவித்தார். தற்சமயத்தில், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அவர்கள் நிலை குறித்து ஒரு கவலையும் இல்லை. அவர்கள் மோதல் நடக்கும் இடங்களில் வசிக்கவில்லை. தற்போது யேமனில் மோதல் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நடக்கிறது, நாடு முழுவதும் நடக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.
No comments:
Post a Comment