ஜம்மு, மே 15: ஐம்முவில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையை நோக்கி ஞாயிற்றுக்கிழமை திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்திய தரப்பில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது இப்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப காலத்தில் 5 முறை பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 45 நிமிடம் தாக்குதல்: ஜம்முவின் நிகோவால்
பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து அந்நாட்டு வீரர்கள் மறைந்து இருந்து இந்திய பகுதியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட இந்திய எல்லை பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். சுமார் 45 நிமிடங்கள் தாக்குதல் நடத்திய பின்னரே பாகிஸ்தான் தரப்பினர் ஓய்ந்தனர். ராணுவ வீரர் சாவு: முன்னதாக ஜம்முவின் புத்வார் பகுதி சர்வதேச எல்லையில் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் வீரர்கள் மறைந்து இருந்து எல்லை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கிச் சுட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். ஜம்முவில் இருந்து 45 கி.மீ. தூரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக மே 5-ம் தேதி புஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இதே போன்று பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். ஏப்ரல் 22, 24-ஆம் தேதிகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
No comments:
Post a Comment