மூன்றாம் கண்.,: கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி

Pages

Monday, May 2, 2011

கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி


அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் மீதான தனது அதிருப்தியை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.  இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைப் பற்றி சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், மற்ற மாநிலங்களில் கட்சித் தொண்டர்கள், கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி அணிந்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிளக்ஸ் பேனர்,
பொதுக் கூட்டம் என அனைத்தும் நடந்தன எனவும், தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி விதித்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என ப.சிதம்பரம் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் எத்தகைய கெடுபிடிகள்-காவல்துறை நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், ஜனநாயக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில் விதிக்கப்பட்ட வரையறைகள்-தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர்.
தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையம் என்பது விருப்பு வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு மாநிலத்திலும்  வெவ்வேறு அளவுகோல்களை தேர்தல் ஆணையம் கடைபிடித்திடக் கூடாது என்பதே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தாகும்.  கருத்து வேறுபாடு இல்லை: தேர்தல் ஆணையத்துக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு முறைப்படுத்த வேண்டுமென்பதில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது என்பது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது. இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதுடன் அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...