இலங்கையில் போர்க் குற்றம் நடந்தது தொடர்பாக, பிரிட்டனின் "சேனல்-4' வெளியிட்ட வீடியோ காட்சிகள் அத்தனையும் உண்மையே' என, ஐ.நா., மனித உரிமைகள்
விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டம் நேற்று துவங்கிய நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளதால், இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில், 2009, மே மாதம், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து, பிரிட்டனில் உள்ள "சேனல் 4' என்ற செய்தி நிறுவனம், ஆண்கள் மற்றும் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து, இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுத் தள்ளிய கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டது. ஐந்து நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோ உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வீடியோ பொய்யானது என மறுத்தது இலங்கை அரசு. அதன்பின் இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா., அமைத்த மூவர் குழு, பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டது. நேற்று முதல் ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டம் துவங்கி நடக்க ஆரம்பித்துள்ளது. இக்கூட்டம், இன்னும் மூன்று வாரங்கள் நடக்கும். இந்நிலையில், ஐ.நா., மனித உரிமைகள் விசாரணையாளரும், தென்ஆப்ரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:"சேனல்-4' வெளியிட்ட வீடியோ காட்சியில் பதிவானவை அனைத்தும் உண்மை. அந்த வீடியோ, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. இறுதியில் வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மை என்று உறுதியானது. நடந்ததை நடந்தபடி அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.இவ்வாறு ஹெய்ன்ஸ் தெரிவித்தார். இலங்கை போர்க் குற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற குரல் எழும்போதெல்லாம், மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில் இடம் பெற்றுள்ள ஆப்ரிக்க மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது பற்றி ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய ஐ கமிஷனர் நவி பிள்ளை, "மூவர் குழு கவனத்துக்கு கொண்டு வந்துள்ள இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து, கவுன்சில் கட்டாயமாக பரிசீலிக்கும். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு விரைவில் நம்பத்தகுந்த பதில்களை அளிக்க வேண்டும்' என கூறியுள்ளார். இதன் மூலம், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment