பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்படும் என்று இரு நாட்டு பிரதமர்களும் தெரிவித்தனர். அரசு முறை பயணமாக தில்லி வந்துள்ள ஜெர்மனி
பிரதமர் ஏஞ்செலா மெர்கெல், பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பாதுகாப்பு நிலவரங்கள், சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு, தொழில் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். "சர்வதேச சமுதாயத்துக்கு பயங்கரவாதம் கடும் சவாலாக விளங்குகிறது. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அல்ல, உலகின் எந்த மூலையில் பயங்கரவாதம் தலையெடுத்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும்' என்று ஏஞ்செலா மெர்கெல் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த நாடு, தனது ராணுவத்தைப் பலப்படுத்தி உள்நாட்டுப் பாதுகாப்பை தானே ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் ஆப்கானிஸ்தானில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் கூறும்போது, ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன என்றார். இந்தியாவின் அணுமின் உற்பத்தி இப்போது 5,000 மெகாவாட்டாக உள்ளது. 2020-க்குள் இதனை 20,000 மெகாவாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய, ஜெர்மனி பிரதமர்கள் பேச்சுவார்த்தையின்போது கல்வி, ஆராய்ச்சி, உயர் தொழில்நுட்பம், அணுசக்தி இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
No comments:
Post a Comment