பாகிஸ்தானில் அணுஆயுதங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார்.தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கடற்படைத் தளபதிகளின் மாநாட்டில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது இதனைத் தெரிவித்தார். பாகிஸ்தானில், கராச்சி கடற்படைத் தளத்தில்
கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். 2 விமானங்கள் அழிக்கப்பட்டன. இந்த கடற்படைத் தளத்துக்கு அருகில் உள்ள ரகசிய இடத்தில்தான் அணுஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி அணுஆயுதங்களைக் கைப்பற்றினால் பெரும் ஆபத்து நேரிடும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இந்தப் பிரச்னையை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியும் எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் அணுஆயுத விவகாரத்தில் இந்திய முப்படைகள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுவதாகவும், இப்போதே அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று அவர் தெரிவித்தார். ஆனால், இதுகுறித்து இப்போது வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது என்று அவர் கூறினார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. எனவே, எந்தப் பிரச்னையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயாராக உள்ளன என்று அவர் உறுதிபடக் கூறினார். ராணுவத் தளபதி வி.கே.சிங் பிறப்புச் சான்றிதழில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து சட்டத்துறை அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று செய்தியாளர்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா-சீனா விரைவில் பேச்சு: ஜம்மு- காஷ்மீர் பிராந்திய தளபதிக்கு சீன அரசு விசா வழங்க மறுத்ததால் இரு நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிவில் ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு, எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை தடைபட்டது. ஓராண்டுக்குப் பின்னர் இரு நாட்டுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான பேச்சு தொடங்க இருப்பதாக ஏ.கே. அந்தோனி தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்புச் செயலர் விரைவில் தில்லி வருவார் என்று அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment