மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இனியும் கடனுக்கு விமான பெட்ரோல் (ஏடிஎப்) அளிக்க முடியாது என்று மத்திய அரசு நிறுவனங்கள்
தெரிவித்துவிட்டன. இதனால் ஏற்படும் நெருக்கடியைச் சமாளிக்க 6 விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் விமான எரிபொருளை (ஏடிஎப்) அளிக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு அளிக்கவேண்டிய கடன் சுமை அதிகரித்ததை அடுத்து, கடன் தொகையை செலுத்தினால் மட்டுமே பெட்ரோல் வழங்க முடியும் என இம் மூன்று நிறுவனங்களும் உறுதிபட தெரிவித்துவிட்டன. திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் 6 விமான சேவையை ஏர் இந்தியா நிறுத்திவிட்டது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து விமானங்களும் கூடுதலாக எரிபொருளை வாங்கி நிரப்பிக் கொண்டு இந்தியா வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தன.தினசரி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மொத்தம் 320 விமான சேவையை ஏர் இந்தியா இயக்குகிறது. இந்நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா அளிக்க வேண்டிய கடன் தொகை ரூ. 2,400 கோடி. இத்தொகையை செலுத்த வேண்டும் இல்லையெனில் இனி சப்ளை செய்யும் பெட்ரோலுக்கு உரிய தொகையை உடனடியாக அளித்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என இந்நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன.
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கவேண்டிய கடன் தொகை குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் ஏற்கெனவே மத்திய விமான அமைச்சகத்திடம் தெரிவித்து, இப்பிரச்னைக்கு சுமுக தீர்வை விரைவாக காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இது தொடர்பாக விமான அமைச்சக அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் இரண்டு சுற்று பேச்சு நடத்தினர். கடந்த ஆண்டு டிசம்பரில் இதேபோன்று பிரச்னை எழுந்தபோது, தினசரி வாங்கும் பெட்ரோலுக்கு உரிய தொகையை செலுத்துவதென முடிவு செய்யப்பட்டது. நாளொன்றுக்கு ஏர் இந்தியா ரூ. 13.5 கோடிக்கு விமான எரிபொருளைக் கொள்முதல் செய்கிறது. இந்தத் தொகை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் மேலும் அதிகரித்தது. இதனால் கூடுதல் தொகையை ஏர் இந்தியாவால் செலுத்த முடியவில்லை. வேறு இடங்களிலிருந்து எரிபொருளைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், எவ்வித பாதிப்பும் இன்றி விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர் இந்தியா நிறுவன சேவையைப் பயன்படுத்திய வகையில் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 450 கோடி அளிக்க வேண்டியுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்த வகையில் அளிக்க வேண்டிய தொகை ரூ. 344 கோடியாகும். இது பிரதமர் அலுவலகம் அளிக்க வேண்டிய தொகையாகும். வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை ரூ. 106 கோடி பாக்கி வைத்துள்ளது. லிபியாவிலிருந்து இந்தியர்களை பத்திரமாகக் கொண்டு வருவதற்காக செலுத்த வேண்டிய தொகையாகும். கடந்த மார்ச் மாதத்திலிருந்தே பிற தனியார் விமான நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவதைப் போன்று சலுகை விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை ஏர் இந்தியா வற்புறுத்தி வருகிறது. இந்த விவகாரம் மத்திய அமைச்சரவை செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்காலத்தில் பெட்ரோல் வாங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால் ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகையை திரும்ப அளிப்பது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர். தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு வங்கி உத்தரவாதம் இருப்பதால் தங்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment