மூன்றாம் கண்.,: ஈழத்து தமிழர்களின் பிரச்சனை, தமிழாகமே நம்பாதே டெல்லி அரசை

Pages

Saturday, May 21, 2011

ஈழத்து தமிழர்களின் பிரச்சனை, தமிழாகமே நம்பாதே டெல்லி அரசை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் நடந்த போர்க் குற்றங்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வன்னி முள்வேலி முகாம்களில் அவர்கள் மீது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியற்றின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை பரிந்துரை செய்ததையடுத்து, அந்த அறிக்கை எதிராக ஆதரவு கோரி வந்த சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸின் டெல்லி பயணம்
வெற்றியுடன் முடிந்துள்ளதையே இரு நாடுகளின் அயலுறவு அமைச்சர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை மறைமுகமாக உணர்த்துகிறது. ஐ.நா. நிபுணர் குழு அளித்த அந்த அறிக்கை அபத்தமானது, பொய்யானது, புலிகள் தயாரித்த அறிக்கைஎன்றெல்லாம் சிறிலங்க அரசு வசைபாடினாலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இந்தியா, சீனா, இரஷ்யா தவிர இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்க்ள் பற்றி பன்னாட்டுக் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலுவாக வற்புறுத்தி வருவதால், வேறு வழியின்றி, தனது பழைய தோழனின் ஆதரவைப் பெற முடிவு செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, அயலுறவுச் செயலர் ஜி.எல்.பெய்ரீஸை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.மே 15,16,17 தேதிகளில் 3 நாட்கள் டெல்லியில் முகாமிட்ட பெய்ரீஸ், பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சரான ஒன்றும் அறியாத, புரியாத எஸ்.எம்.கிருஷ்ணா, போர் நடந்தபோது இந்தியாவின் அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, போருக்கு உதவியபோது அயலுறவுச் செயலராக இருந்து, இப்போது தேச பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஷிவ்சங்கர் மேனன், அயலுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்களின் போது பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் 17ஆம் தேதி இரவு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இரு தரப்பும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரை பற்றி விவாதி்த்தாக ஒரு சொல் கூட இடம்பெறவில்லை!இரு தரப்பு உறவுகள் பற்றியே இரு நாடுகளின் அயலுறவு அமைச்சர்களும் விவாதித்ததாக அந்த கூட்டறிக்கை கூறுகிறது. அதோடு தமிழர் பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது என்றும், போர் முடிந்தது, இலங்கையில் நெடுங்காலமாக இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒரு நல்வாய்ப்பினை அளித்துள்ளது என்று இரு தரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சனைக்கு சிறிலங்க அரசமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்து அதிகாரப் பகிர்வு அளிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்காக தமிழர் தேசிய கூட்டணியுடன் பேசி வருவதாகவும் பெய்ரீஸ் இந்திய அரசிற்கு தெரிவித்ததாக அந்த கூட்டறிக்கை கூறுகிறது. 13வது திருத்தம் என்பதெல்லாம் குப்பைக்குப் போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால், அதுபற்றிப் பேசி வருவதாக சிறிலங்க அயலுறவு அமைச்சர் கூறுகிறாராம், அதனை டெல்லி அரசு ஏற்றுக்கொள்கிறதாம்! ஈழத் தமிழன், தமிழ்நாட்டுத் தமிழன் என்று வேறுபாடு பார்க்காமல் இரு நாடுகளும் பூ சுற்றுகின்றன! அது மட்டுமல்ல, போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீள் குடியமர்த்தம் செய்வதையும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றவும், அவசர கால சட்டங்களை திரும்பப் பெறுவதையும், மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்கவும், அங்கு இயல்பு நிலை திரும்பவும் நடவடிக்கை எடுக்க சிறிலங்க அயலுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசுக்குத்தான் எவ்வளவு கரிசனம்? அது சரி, இதையெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன?

இந்திய எங்களது நட்பு நாடுதான், புலிகளைத் தோற்கடிக்க அவர்கள் உதவினார்கள் என்பதும் உண்மைதான், அதற்காக அவர்கள் எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டால் அதனை ஏற்க மாட்டோம் என்று மார்தட்டிய சிறிலங்க அரசிற்கு, தனது அயலுறவு அமைச்சரை அனுப்பி தமிழர்களுக்கு இதையெல்லாம் செய்யப்போகிறோம் என்று உறுதியளிக்க வேண்டிய தேவையும், அவசியமும் எங்கிருந்தது வந்தது?

ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையினால் வந்தது! ஆனால் அதனைச் சொல்ல இரு நாட்களுக்கும் வெட்கம்! ஏனென்றால், ஒன்றாய் நின்று தமிழினப் படுகொலையை செய்தவர்கள் அல்லவா? எனவே ஐ.நா.அறிக்கை பற்றி பேச துணிவில்லை.

வன்னி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், அவர்கள் வாழ்ந்த இடங்களில்தான் குடியமர்த்தப்பட்டார்களா? நிரூபிக்க முடியுமா? எங்கெங்கோ குடியமர்த்தப்பட்ட மக்கள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூட வசதியின்றி, பேரவலத்திற்கு ஆட்பட்டுள்ளதை மறுக்க முடியுமா? அவர்கள் வாழ்ந்த வாழ்விடங்களில் சிங்கள மக்கள் முன்னாள் இராணுவத்தினரும், குற்றவாளிகளும் குடியமர்த்தப்படுவதை அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசினாரே, அதுவும் ராஜ்பகச முன்னிலையிலேயே. தமிழர்களின் காணிகள் (வேளாண் நிலங்கள்) சிங்களருக்கு அளிக்கப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் கூறினாரே. அதுமட்டுமா, தமிழர் பகுதிகளை இராணுவ பகுதிகளாக (இஹய்ற்ர்ய்ம்ங்ய்ற்) ஆக அறிவித்து, அங்கு இராணுவ முகாம்களும், இராணுவ குடியிருப்புகளும் கட்டப்படுகின்றனவே. இவை யாவும் சிறிலங்க ஊடகங்களிலேயே வருகின்றனவே, உள்ளபடியே தமிழரின் மறுவாழ்வில் அக்கறை கொண்டதாக இந்திய அரசு இருக்கிறதென்றால், இதனையெல்லாம் தட்டிக்கேட்காததேன்? கேட்க முடியாது, ஏனென்றால் தமிழின அழிப்பில் சிங்கள அரசின் பங்காளியாக செயல்பட்டது டெல்லி அரசு. அதனைத்தான் நான் இந்தியாவின் போரை நடத்தினேன்என்று அதிபர் ராஜபக்ச கூறியது!

எனவே, வேறு வழியின்றி, காப்பாற்ற வேண்டிய தனது கொலைக் கூட்டாளியை காப்பாற்ற டெல்லி அரசு உறுதியளித்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு ஈடாக பல திட்டங்களை நிறைவேற்றி்க் கொள்ளும் உறுதி மொழிகளையும் பெற்றுள்ளது. அதுதான் சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க, பலாலி- காங்கேயன் துறை இரயில் பாதை அமைக்க, புதிய சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள உதவிடும் திட்டங்களை அளிக்க, இதுநாள் வரை அதிபர் ராஜபக்ச ஒப்புக்கொள்ள முன்வராத விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது குறித்து மீண்டும் பேச, இந்தியா இலங்கை நாடுகளின் மின் அமைப்புகளை இணைப்பது குறித்துப் பேச சிறிலங்க அரசை ஒப்புக்கொள்ள வைத்துள்ளது.

ஈழத் தமிழரை ஏமாற்றிட மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தும் பேசி, உறுதிமொழி பெற்றுள்ளதாக இந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 28,29 தேதிகளில் இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழு கூடி, மீன் பிடித்தல் பற்றி விவாதித்தார்களாம், அப்போது மீனவர்கள் மீது எந்த நிலையிலும் ஆயுத பிரயோகம் செய்வது இல்லை என்று ஒப்புக்கொண்டார்களாம்! கடின மனத்துடன் ஜோக் அடிக்கின்றனர்.

இப்படி நடந்த கூட்டுப் பணிக்குழு சந்திப்பிற்குப் பிறகுதானே இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சித்தரவதை செய்யப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்டார்கள்? அதைப்பற்றிய செய்தியே காணவில்லையே! அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே இந்திய அரசு காட்டிக்கொள்ளவில்லையே. சொந்த நாட்டு மீனவர்களைக் கொன்றதையே பேசாதவர்கள், ஈழத்து தமிழர்களின் நலனையே பேசுவார்கள்?

டெல்லியின் ஏமாற்றுப் புத்தி மாறாது. அது ஐ.நா.அறிக்கைக்கு எதிராகவும், சிறிலங்க அரசிற்கு ஆதரவாகவும் நிற்கும். தனது சக்தியைப் பயன்படுத்தி அந்த விசாரணையை தடுத்த நிறுத்த முயற்சிக்கும். அதை மிகுந்த இராஜ தந்திரத்துடன் நிறைவேற்றும். எப்படி இந்த கூட்டறிக்கையில் ஐ.நா.அறிக்கை பற்றி பேசிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளனவோ, அதேபோல் ஐ.நா.அறிக்கைக்கு எதிராக பின்னணியில் இருந்து டெல்லி அரசு செயல்படும்.

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் புகட்டிய பாடத்தில் இருந்து டெல்லி எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே கூட்டறிக்கை காட்டுகிறது

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...