இந்தியாவுக்கு எதிராக உளவு பார்ப்பதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் பயிற்சி கொடுத்தது என, மும்பைத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த டேவிட் கோல்மென் ஹெட்லி, சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.கடந்த 2008ம்
ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, மும்பையில் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்கர்கள் ஆறு பேர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை நிறைவேற்றுவதற்காக, மும்பையின் பல இடங்களை ஆய்வு செய்து சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லியை, சிகாகோ போலீசார் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர். மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததை ஹெட்லி ஒப்புக்கொண்டதால் அவர் மீதான மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, சிகாகோ கோர்ட்டில் சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஹெட்லியிடம் தொடர்ந்து மூன்று நாள் விசாரணை நடந்தது.அப்போது ஹெட்லி கூறியதாவது: இந்தியா மீது தாக்குதல் நடத்த லஷ்கர் -இ- தொய்பா முதலில் பயிற்சி அளித்தது. ஆனால், "இந்த பயிற்சி குழந்தைத் தனமானது' என, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் அதிகாரி மேஜர் இக்பால் என்னிடம் தெரிவித்தார். கடந்த 2006ம் ஆண்டு மேஜர் அலி என்பவர், ஐ.எஸ்.ஐ.,அதிகாரியான மேஜர் இக்பாலிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். லாகூரில் விமான நிலைய வளாகத்தை ஒட்டிய இரண்டு அடுக்கு மாடியில் தான், உளவு பார்ப்பதற்குரிய பயிற்சியை பெற்றேன். மேஜர் இக்பால், பாதுகாப்பு படையில் இருந்தாலும் அவர் சீருடை அணிந்து நான் பார்த்ததில்லை. ஆனால், அவர் ராணுவ வீரர்கள் புடைசூழ ஜீப்பில் வருவார். ஒரு இடத்தை எப்படி நோட்டமிடுவது, அங்கு வரும் மக்களை எப்படி மதிப்பிடுவது, இந்திய ராணுவத்துக்குரிய இடங்களை எப்படி கண்டறிவது, ராணுவத்தினரின் நடமாட்டங்களை கண்காணிப்பது, ரகசிய போட்டோக்களை எப்படி எடுப்பது, தாக்குதல் நடத்துவதற்குரிய இடங்களை எப்படி தேர்வு செய்வது என்பது உள்ளிட்ட சகல வித்தைகளையும் ஐ.எஸ்.ஐ., தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. நான் அமெரிக்க பிரஜை என்பதால், இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் வராது என்ற காரணத்தால் தான் என்னை வைத்து மும்பைத் தாக்குதலுக்குரிய இடங்களை நோட்டமிடச் செய்தனர். இந்தியாவில் தங்கி வியாபாரம் செய்தபடி மேலும் பல இடங்களை நோட்டமிடச் சொன்னார்கள். இதற்காகத்தான் நான் தகாவுர் ராணாவிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். இரண்டு முயற்சிகள் தோல்வி: கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரம்ஜான் அன்றே லஷ்கர் -இ- தொய்பா அமைப்பினர், மும்பையில் தாக்குதல் நடத்த படகில் கிளம்பினர். செப்டம்பர் மாதம் 29ம் தேதி அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வந்த படகு பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதால், அப்போதைக்கு தாக்குதல் நடத்த முடியவில்லை, என லஷ்கர் -இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த சஜத் மிர் என்பவர் எனக்கு மொபைல்போனில் தகவல் கொடுத்தார். மும்பை மீதான தாக்குதல் முயற்சியை கைவிட்டால் கடவுள் சந்தோஷமடையமாட்டார், என பாஷா என்பவர் கவலைப்பட்டார். அவரது வற்புறுத்தலுக்கிணங்க, அக்டோபர் மாதம் மீண்டும் ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி, மும்பை நோக்கி புறப்பட்டபோது, மும்பை அருகே கடலோர பாதுகாப்பு படையினர், லஷ்கர் -இ- தொய்பா அமைப்பினர் சென்ற படகை நோக்கி சுட்டனர். இதில் கராச்சியிலிருந்து புறப்பட்ட படகு தீப்பிடித்து நாசமானது. இதனால், இரண்டாவது முயற்சியும் தோல்வியடைந்தது. மூன்றாவது கட்டமாக நவம்பர் 26ம் தேதி லஷ்கர் -இ- தொய்பாவினர் வெற்றிகரமாக மும்பை சென்று டாக்சி ஒன்றை பிடித்து, நான் சொன்ன இடங்களில் சாமர்த்தியமாக தாக்குதல் நடத்தினர். மும்பையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை சஜத் எனக்கு தெரியப்படுத்தினார். நான் உடனடியாக "டிவி'யில் இந்த காட்சியை கண்டு மகிழ்ந்தேன். தாக்குதலில் ஈடுபடுவர்கள் முஸ்லிம்கள் என்ற சந்தேகம் வரக்கூடாது, என்பதற்காக, இந்து கோவிலுக்கு சென்று 15 சிவப்பு நோன்பு கயிறுகளை வாங்கிக்கொண்டேன். கை மணிக்கட்டில் கட்டப்படும் இந்த கயிற்றை மேஜர் இக்பால், தாக்குதல் நடத்தும் நபர்களின் கையில் கட்டி விட்டார். இவ்வாறு ஹெட்லி, கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.
No comments:
Post a Comment