தமிழக அமைச்சரவையில், கட்சி அனுபவத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், படித்த பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, தமிழகத்தில், சமீப காலமாக கல்வியின் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பினரும் உணர்ந்து வருகின்றனர். இதற்கேற்ப அரசியல் மற்றும் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதி நிர்ணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், இளைஞர்களிடையே வலுத்து வருகிறது. இதற்கு, அரசியல் மற்றும் கட்சி அனுபவங்களை மட்டுமே கருத்தில் கொண்டு,
எம்.எல்.ஏ., மற்றும் மந்திரி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனித்து பெரும்பான்மை பெற்று, ஆட்சியமைத்துள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதாவுடன், 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும், பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. இதில் அரசியல் அனுபவம் மற்றும் கட்சியில் மூத்தவர்கள் என்றெல்லாம், பாராமல், புதுமுகமாக இருந்தாலும், பெரும்பாலானோர் பட்டதாரிகளாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களாக, 9ம் வகுப்பு படித்த, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்த சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், பி.யு.சி., படித்த வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடைத்துறை அமைச்சர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே உள்ளனர். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் பட்டயப்படிப்பு படித்துள்ளார். மீதமுள்ள, 28 பேரும் பட்டப்படிப்பும் அதற்கு மேற்பட்ட படிப்புகளும் படித்துள்ளனர். இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி, செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன், வணிகவரித்துறை அமைச்சர் கோகுல இந்திரா, சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா, விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சர் சிவபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சண்முகம், தகவல் தொழில்நுட்பத்துறை உதயகுமார் ஆகிய ஏழு பேர் பி.எல்., அல்லது எம்.எல்., எனும் வக்கீல் படிப்பு படித்தவர்களாக உள்ளனர். அதிக அளவில் பட்டதாரிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், இளைய தலைமுறையினரிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
No comments:
Post a Comment