தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மரியம் மரணத்தில் மர்மம் நீடிப்பதால் சிபிசிஐடி விசாரணை நடத்த ஜெ., நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் பொதுமக்களின் கருத்தை ஏற்று சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதியதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை இறந்தார். அவருக்கு வயது 60. சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சியில் இருந்து சென்னை சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது. அமைச்சராக பதவியேற்ற 8&வது நாளில் மரியம் பிச்சை இறந்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை, கடந்த திங்கள்கிழமை (16&ம் தேதி) பதவி ஏற்றது. ஜெயலலிதாவுடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதில் திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற மரியம்பிச்சை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், திருச்சியை ஆண்ட மன்னன் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்ததின விழா, அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 6.35 மணிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி இருவரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரும் தனித்தனி காரில் சென்னை புறப்பட்டனர். புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி, இன்று மதியம் சட்டசபையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் சென்றனர். மரியம்பிச்சையின் கார் முதலில் சென்றது. அந்த காரை சென்னை முகப்பேரை சேர்ந்த ஆனந்தன் (26) ஓட்டினார். அமைச்சர் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் திருச்சியை சேர்ந்த 4 பேர் இருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருவிளக்குறிச்சி பிரிவுசாலை அருகே முன்னால் சென்ற லாரி மீது அமைச்சரின் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. கார் நொறுங்கியதில் அமைச்சர் மரியம்பிச்சை தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்தார். டிரைவரும் மற்றவர்களும் லேசான காயத்துடன் தப்பினார். பின்னால் வந்து கொண்டிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி, விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் அங்கு வந்தனர். அமைச்சர் மரியம்பிச்சையின் உடல், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிமுகவினரும் அதிகாரிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காயமடைந்த 5 பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரியம்பிச்சை, அமைச்சராக பதவியேற்ற 8வது நாளில் விபத்தில் இறந்த சம்பவம், அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாழ்க்கை குறிப்பு: அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. பட்டதாரி. மனைவி பாத்திமா கனி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
1972ல் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய காலத்திலேயே வட்டச் செயலாளராக அரசியல் பணியை தொடங்கினார். கட்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர், மாநகர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார். திருச்சி மாநகராட்சி 27வது வார்டு கவுன்சிலராக 3 முறை(தொடர்ந்து 15 ஆண்டுகள்) தேர்வு செய்யப்பட்டார். அரியமங்கலம் கோட்டத் தலைவராகவும் இருந்தார். திருச்சி நகர கூட்டுறவு வங்கியின் இயக்குனராக 2 முறை பொறுப்பு வகித்துள்ளார். 2006 சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது நடந்த தேர்தலில் அதே தொகுதியில் நேருவை எதிர்த்து போட்டியிட்டு 7 ஆயிரத்து 179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல்முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மரியம்பிச்சை, அமைச்சரவையிலும் முதல்முறையாக இடம் பிடித்தார்.
விபத்து நடந்தது எப்படி?
விபத்தில் உயிர் தப்பிய டிரைவர் ஆனந்தன் (26) கூறியதாவது: காலை 7 மணி அளவில் பெரம்பலூரை நோக்கி சென்று கொண்டிருந்தோம். அமைச்சர் முன் சீட்டில் இருந்தார். சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதை ஓவர்டேக் செய்ய 20 அடி தூரத்திலேயே ஹாரன் கொடுத்தேன். அருகில் நெருங்கியபோது திடீரென லாரி டிரைவர் வண்டியை வலதுபுறம் திருப்பினார். கார் வேகமாக சென்றுகொண்டிருந்ததால் கன்ட்ரோல் செய்து நிறுத்த முடியவில்லை. லாரியின் பின்புறம் மோதிவிட்டது. விபத்து நடந்தது தெரிந்தும் டிரைவர் லாரியை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.
சட்டசபைக்கு செல்லாமலே...
'
விபத்தில் இறந்த அமைச்சர் மரியம்பிச்சை, சட்டசபைக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சரவையிலும் முதல்முறையாக இடம் பெற்றார். தேர்தலுக்கு பிறகு சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. இன்றுதான் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களும் எம்எல்ஏக்களாக முறைப்படி பதவி ஏற்றனர். மரியம்பிச்சை, முதல்முறையாக இன்றுதான் சட்டசபைக்குள் செல்ல இருந்தார். ஆனால், அதற்குள் விபத்தில் இறந்துவிட்டார். சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும், சபைக்குள் காலடி வைக்காமலே அவர் மறைந்துவிட்டார். விபத்தில் மரணமடைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் உடல், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உடலுக்கு அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மரியம்பிச்சை உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். மரியம்பிச்சை வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
No comments:
Post a Comment