தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு, ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு, ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ., தனபாலும், சட்டசபை செயலரிடம், நேற்று, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்கள் இருவரும், இன்று காலை நடக்கும் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழக சட்டசபை
தற்காலிக சபாநாயகராக, செ.கு.தமிழரசன் முதலில் நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 23ம் தேதி, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான மனு தாக்கல், அன்றே துவங்கியது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதால், அக்கட்சியைச் சேர்ந்த ராயபுரம் எம்.எல்.ஏ., ஜெயக்குமார், சபாநாயகர் பதவிக்கும், ராசிபுரம் எம்.எல்.ஏ., தனபால், துணை சபாநாயகர் பதவிக்கும் தேர்வு செய்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று, இவர்கள் இருவரும் மனுக்களை தாக்கல் செய்தனர். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட, அனைத்துத் துறை அமைச்சர்கள் புடைசூழ, ஜெயக்குமார் மற்றும் தனபால், காலை 11.50க்கு, சட்டசபை செயலர் ஜமாலுதீன் அலுவலகத்திற்கு வந்தனர். அமைச்சர்கள் முன்னிலையில், முதலில் ஜெயக்குமார், தன் மனுவை சட்டசபை செயலரிடம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து, தனபால், மனுவை சமர்ப்பித்தார். இது குறித்து, ஜமாலுதீன், நிருபர்களிடம் கூறியதாவது: சபாநாயகர் பதவிக்கு ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு தனபாலும் மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களது மனுக்களை, முதல்வர் முன் மொழிந்துள்ளார். நிதியமைச்சர், வழி மொழிந்துள்ளார். இவர்கள் இருவரைத் தவிர, வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர். எனினும், முறைப்படி, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (இன்று) காலை, 9.30 மணிக்கு, சட்டசபையில் நடைபெறும்.தற்காலிக சபாநாயகர், தேர்தலை நடத்துவார். "சபாநாயகர் பதவிக்கு ஜெயக்குமாரைத் தவிர, வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர், சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்' என்ற அறிவிப்பை, தற்காலிக சபாநாயகர் வெளியிடுவார். அதன்பின், சபாநாயகராக ஜெயக்குமார் பதவியேற்றுக்கொண்டு, துணை சபாநாயகர் தேர்வை அறிவிப்பார். இவ்வாறு ஜமாலுதீன் கூறினார்.
No comments:
Post a Comment