சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிப்பதை தமிழக பள்ளி கல்வித்துறை திடீரென நிறுத்தியுள்ளது. இந்தப் பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கவிதைகளும் சிறுகுறிப்புகளும் இடம் பெற்றுள்ளதால் அந்தப் பகுதிகளை நீக்கிவிட்டு புத்தகங்களை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி
உள்ளது. சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் செம்மொழி பாடலும் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், பிசிராந்தையார் பாடலுக்கு அவர் எழுதிய விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாண்டு விநியோகிப்பதற்காக 3.5 கோடி இலவசப் புத்தகங்கள் 65 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 1 கோடி புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை கல்வி மாவட்டம் வாரியாக பிரித்து கடந்த 12 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. புத்தகங்களை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவகலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சமச்சீர் கல்வி பாடப் புததகங்கள் விநியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யக் கூடாது என்ற வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment