மூன்றாம் கண்.,: முதல்வர் ஜெயலலிதா ஆவேசம், நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி.

Pages

Thursday, May 19, 2011

முதல்வர் ஜெயலலிதா ஆவேசம், நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி.

 

தனித்தேஆட்சி என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார். அவரது செயல், சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. முதுகில் குத்துவதில் அவர் எல்லாரையும் மிஞ்சிவிட்டார்,'' என, தமிழகமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தனித்தே ஆட்சி என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தன்னிச்சையாக அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, "சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தனக்கு துரோகம் செய்துவிட்டது எனக் கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப்பின் அதே துரோகத்தை அ.தி.மு.க., வுக்கு செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இணைந்து ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது. தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்த நான், புதுச்சேரி சென்று ரங்கசாமி தலைமையிலான கூட்டணிக்கும் பிரசாரம் செய்தேன். அ.தி.மு.க., சார்பில், தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப்பட்டது.
அ.தி.மு.க., மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், அ.தி.மு.க.,  வாக்குறுதிகளை மனதில் வைத்து தான் புதுச்சேரி மக்கள் அ.தி.மு.க., - என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்தனர். கூட்டணி, தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. இதற்காக, புதுச்சேரி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தேன். ஆனால், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்க அவருக்கு மனமில்லை. நன்றி மறந்து, நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார். எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தாருக்கு வாழ்வில்லை என்ற வள்ளுவர் வாய்மொழியை இந்த தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அ.தி.மு.க., ஆதரவுடன், செல்வாக்குடன் வெற்றி பெற்றுவிட்டு, ஆட்சி அமைக்க துணை நிலை கவர்னரிடம் உரிமை கோரச் செல்லும்போது ஒரு வார்த்தை கூட எனக்கு தெரிவிக்காமல், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல். நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார். கூட்டணி கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி, மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார். புதுச்சேரி முதல்வரின் ஏமாற்று நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்களோடு அ.தி.மு.க., ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல் படும். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...