ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் சில மணி நேரம் அங்கு இயல்பு நிலை ஸ்தம்பித்தது.இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட்
அணிவது கட்டாயம் என இந்தூர் மாநகர நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டனர். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த உத்தரவை வாபஸ் வாங்க வலியுறுத்தி ராஜீவ் விகாஸ் கேந்திரா என்ற அமைப்பு நேற்று காலை 7 மணிமுதல் 12 மணிவரை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டனர். இதனால், இந்தூர் நகரில் சில மணி நேரம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், ஜவஹர் மார்க், டோரி கார்னர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதியம் 12 மணிக்கு பின் கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. சென்னை, போபால் உள்ளிட்ட நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment