மூன்றாம் கண்.,: மருத்துவ மனையில் இரு குழுவினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டை

Pages

Thursday, May 19, 2011

மருத்துவ மனையில் இரு குழுவினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டை




ரோதக் (ஹரியாணா),  மருத்துவ மனையில் இரு குழுவினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர். இருவருக்குக் காயம் ஏற்பட்டது. ரோதக் நகரில் பண்டிட் பாகவத் தயாள் சர்மா அரசு மருத்துவ மனையில் புதன்கிழமை இரவு  நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெயர் பிரவீண் (35). உயிரிழந்த மற்றொருவர் பெயர் தேஜ்வீர் சிங். இவர் அந்த மருத்துவமனையில் காவலாளியாகப்
பணியாற்றி வந்தார்.இதில் பிரவீண் என்பவருடைய சகோதரர் வேறொரு சம்பவத்தில் காயமுற்று அந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரைக் காண பிரவீண் மருத்துவ மனைக்ககுச் சென்றார்.அதே மருத்துவ மனையில் ஜெய் பகவான் என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். இவர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவர் மதுபானக் கடைகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர். இவருக்கும் பிரவீணுக்கும் முன் விரோதம் உண்டு. மேலும், தன்னைச் சுட்டது பிரவீணின் ஆள்கள்தான் என நம்பினார் ஜெய் பகவான். இந்நிலையில், சகோதரரின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்த பிரவீணை, ஜெய் பகவானின் கும்பலைச் சேர்ந்தவர்கள் பார்த்தனர். ஜெய் பகவானைத் தீர்த்துக்கட்டத்தான் பிரவீண் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் என்று நினைத்து பகவானின் ஆள்கள் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினர். உடனே பிரவீணும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.இந்த துப்பாக்கி சூட்டில் பிரவீண் உயிரிழந்தார். சுட்டுவிட்டு ஓட முயன்றவர்களை மருத்துவ மனைக் காவலாளியான தேஜ்வீர் சிங் பிடிக்க முயன்றபோது அவரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தேஜ்வீர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரவீண், தேஜ்வீரைச் சுட்டவர்கள் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றனர். அரசு மருத்துவமனைக்குள் துப்பாக்கி எடுத்துச் செல்லும் அளவுக்கு அங்கு காவல் நிலைமை மோசமாக இருந்துள்ளது என்பது பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு காவல் பணியில் இருந்த 2 போலீஸர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...