மூன்றாம் கண்.,: பா.ம.க. அங்கீகாரம் ரத்தா?

Pages

Tuesday, May 17, 2011

பா.ம.க. அங்கீகாரம் ரத்தா?






 சட்டப் பேரவைத் தேர்தலில் போதுமான வாக்குகளைப் பெறாததால் பா.ம.க.வின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், அக்கட்சி 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். அதாவது, கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, குறைந்தது ஒரு எம்.பி. தேர்வு
செய்யப்பட்டிருக்க வேண்டும். வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடைசியாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, முதல் இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சியால் நிறைவேற்ற இயலாது. அதேபோல் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சி 5.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மூன்றாவது நிபந்தனையையும் நிறைவேற்ற முடியாது. 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கடைசி நிபந்தனையையும் நிறைவேற்ற இயலாது. ஆகவே, தேர்தல் ஆணையத்தின் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றைக்கூட நிறைவு செய்ய முடியாத நிலை பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளதால், அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என தெரிகிறது. ஏற்கெனவே 2009-ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரி மாநில கட்சி அங்கீகாரத்தை பா.ம.க. இழந்துவிட்டது. மேலும் இப்போதைய தேர்தல் முடிவும் அக்கட்சிக்கு பின்னடைவைத் தருவதாக அமைந்துவிட்டது.  எந்த சின்னத்தில் போட்டி: ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தாலும், அடுத்த 6 ஆண்டுகள் வரை நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அந்தக் கட்சிக்கென ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சின்னத்திலேயே போட்டியிட முடியும். அந்த காலகட்டத்துக்குள் அடுத்து நடைபெறும் தேர்தல்களில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 4 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்துவிட்டால் மீண்டும் அங்கீகாரம் கிடைத்து, சின்னத்தை தக்க வைத்து கொள்ளலாம். இல்லையெனில் அதன் பிறகு சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட முடியும்.  தே.மு.தி.க.வுக்கு அங்கீகாரம்: விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு இதற்கு முந்தைய தேர்தல்களில் 6 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், அக்கட்சியின் சார்பில் கடந்த பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால், அக்கட்சியால் அங்கீகாரம் பெற முடியவில்லை. இந்நிலையில், அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதோடு, அக்கட்சியைச் சேர்ந்த 29 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே, தே.மு.தி.க.வுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...