ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட்டில் நேட்டோ படை சனிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் 52 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள்.ஹெல்மண்ட் மாகாணத்தின் ஒரு
பகுதியில் அல்-காய்தா ஆதரவு தலிபான்கள் பதுங்கியிருப்பதாக நேட்டோ படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அதிரடி விமானத் தாக்குதலை நடத்தியது. இரு வீடுகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அந்த வீடுகளில் இருந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 சிறார்கள், 5 சிறுமிகள், 2 பெண்கள் ஆவர். 6 பேர் காயம் அடைந்தனர்.இப்படி பல இடங்களில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 52 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்களின் நிலைகளை குறிவைத்து நேட்டோ படை விமானத் தாக்குதலையும், தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நுரிஸ்தான் மாகாணத்தில் தலிபான்களை குறிவைத்து நேட்டோ படை நடத்திய தாக்குதலில் போலீஸôர் 20 பேரும், பொதுமக்கள் 18 பேரும் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் இதை நேட்டோ படை மறுத்துள்ளது. நுரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நுரிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு உண்மை கண்டறியும் குழுவினர் சென்றுள்ளனர். அவர்கள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment