பிரான்ஸில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸில் தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டதாக கடந்த 10ம் தேதி 6 பேரை அந் நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் என்பவரும் அடக்கம். அல்ஜீரியாவிலிருந்து திரும்பி பிரான்சுக்கு
வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.பிரான்ஸைச் சேர்ந்த மூவரை பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களுக்கு இவர் அனுப்பி வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. ரஷீத் குறித்து பிரான்ஸ் போலீசார் மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து அவர் குறித்து மத்திய உளவுப் பிரிவினரும் தமிழக உளவுப் பிரிவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.இவர் மதுரை மேலூரைச் சேர்ந்தவர் என்றும், தனியார் பொறியியல் படித்தபோது சிமி இயக்கத்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாதியின் கூட்டாளிகளுடன் இவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்தபோதே இவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கண்காணிக்க ஆரம்பித்ததாகவும், 3 மாதங்களுக்கு முன் இவர் பிரான்சிலிருந்து மேலூர் வந்து 10 நாட்கள் தங்கியிருந்தபோதும் கண்காணிப்பிலேயே இருந்தார் என்றும், அந்த நேரத்தில் இவரது நடவடிக்கைகளில் தீவிரவாத செயல்கள் ஏதும் இல்லாததால் இவரை அப்போது ஐ.பி. கைது செய்யாமல் விட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால், பிரான்சில் இவர் எந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்ற விவரம் ஐ.பியிடம் இல்லை. இப்போது பிரான்ஸ் போலீசார் தந்துள்ள தகவல்களின்படி இவரது பின்னணியை ஐ.பியும் மாநில உளவுப் பிரிவினரும் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளனர். இவர் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், மெக்கனிக்கல் என்ஜினியரான இவர் அல்-கொய்தா அமைப்புடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தானில், குறிப்பாக பின்லேடன் கொல்லப்பட்ட அபோடாபாத் நகரில் தீவிரவாத அமைப்பினருடன் இவர் தொடர்பு கொண்டிருந்ததாகவும் பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பிரான்ஸ் வாலிபர்கள் மூவரை தீவிரவாத பயிற்சிக்காக இவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.இவர் குறித்து முழுமையாக விசாரித்து தகவல் தருமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. இதையடுத்து ரஷீத்தின் குடும்பத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் போலீஸார் திரட்டி வருகின்றனர். ரஷீத் குடும்பத்தினர் கடைசியாக திருச்சியில் தங்கியிருந்ததும், அவர் தனது பாஸ்போர்ட்டை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் பெற்றார் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரிடம் போலி பாஸ்போர்ட் ஒன்றும் இருக்கலாம் என்றும் தெரிகிறது, பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பலமுறை சென்று வந்துள்ள ரஷீத்துக்கு, ஷியா எதிர்ப்பு இயக்கமான ஜுன்துல்லா (Jundullah) என்ற அமைப்பின் மூலமாக அல்-கொய்தா இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டதாக பிரான்ஸ் உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment