ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கனதி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாரும், ராணுவத்தினரும் இணைந்து அங்கு தேடுதல் பணியில்
ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் சுட்டனர். புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்த சண்டையில் முகமது இஷாக் என்கிற பயங்கரவாதி உயிரிழந்தான். தன்னை தோடா மாவட்டத்தின் கமாண்டராக அறிவித்துக் கொண்ட சல்மான் உள்ளிட்ட மூவர் அங்கிருந்து தப்பிவிட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இஷாக்கிடம் இருந்து இரண்டு சீன கையெறி குண்டுகள், வரைபடம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தப்பிச் சென்ற மற்ற மூன்றுபேரையும் தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமையன்று பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அபு உமர் இங்கு சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.குப்வாரா: இதேபோல் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இங்குள்ள ஜல்தாரா கிராமத்தில் ஒரு வீட்டில் இரு பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகளும் பதிலுக்கு சுட்டனர். இந்த சண்டையில் பகாதுல்லா என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் துப்பாக்கி, தகவல் தொடர்பு கருவிகள் உள்ளிட்டவை அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.
No comments:
Post a Comment