மூன்றாம் கண்.,: திராவிட் 34-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார்

Pages

Saturday, July 30, 2011

திராவிட் 34-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 85.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 221 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இந்தியா 266/4: பின்னர் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.இரண்டாவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு திராவிட்டும், லட்சுமணும் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். தொடக்க ஓவர்களில் இவர்களை வீழ்த்த இங்கிலாந்து பெüலர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. லட்சுமண் 54 ரன்கள் எடுத்திருந்தபோது பிரெஸ்னன் பந்துவீச்சில் வெளியேறினார். திராவிட்-லட்சுமண் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு களமிறங்கிய சச்சின் நிதானமாக விளையாட, மறுமுனையில் திராவிட் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சச்சின் 16 ரன்களில் ஆட்டமிழந்து, 100-வது சதத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 12 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து திராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார் யுவராஜ் சிங். உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக களமிறங்கிய யுவராஜ், ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடினார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டது. அவ்வப்போது பவுண்டரிகளை விளாச இந்தியாவின் ஸ்கோர் உயர்ந்தது. 94 பந்துகளில் யுவராஜ் அரைசதமடித்தார். அவரைத் தொடர்ந்து திராவிட் தனது 34-வது டெஸ்ட் சதத்தை விளாசி சாதனை படைத்தார். இந்திய அணி 85.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது.திராவிட் 115 ரன்களுடனும், யுவராஜ் சிங் 62 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பிராட், பிரெஸ்னன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து தனது 34-வது சதத்தைப் பதிவு செய்தார் திராவிட். இதன்மூலம் 34 சதங்கள் அடித்துள்ள இந்தியாவின் சுனில் காவஸ்கரின் சாதனையை சமன் செய்து, அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தனது 155-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார். உலக அளவில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் இந்தியாவின் காவஸ்கர், மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாராவுடன் 4-வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் திராவிட். அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் சச்சின் (51) முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் (40) இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (39) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் திராவிட் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...