மூன்றாம் கண்.,: பிரதமரைக் குற்றம்சாட்டவில்லை:ஆ. ராசா

Pages

Tuesday, July 26, 2011

பிரதமரைக் குற்றம்சாட்டவில்லை:ஆ. ராசா

 2ஜி அலைக்கற்றை ஓதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தையும் சேர்க்க தாம் முயல்வதாக வெளியான தகவல்கள் திரிக்கப்பட்டவை என மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அவரே நேரில் ஆஜராகி வாதாடினார்.

2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஒரு வாரமாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆ.ராசா, வழக்கறிஞர் சுசீல் குமார் மூலமாகவும் தாமே நேரடியாகவும் வாதிட்டு வருகிறார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை அவர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று கடந்த திங்கள்கிழமை சுசீல் குமார் கூறியிருந்தார். இந்தக் கருத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ஆ.ராசா மாறுபட்டார். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுசீல் குமார் வாதிட்டார். ஊடகங்களில் வெளியானது போல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்த தாம் முயற்சிக்கவில்லை என்றும், இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே சமயம், டிபி ரியாலிட்டி நிறுவன பங்குகள் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தவர் என்கிற முறையில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியளிக்க வேண்டும் என்றும் சுசீல் குமார் வாதிட்டார். இந்த வழக்கில் ஆ.ராசா முதல் முறையாக செவ்வாய்க்கிழமை வாதாடினார். அவர் கூறியது: 2ஜி அலைகற்றைக்கு அனுமதி வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி கூறியது அர்த்தமே இல்லாதது. இதை சிபிஐ கூட ஏற்கவில்லை. 2ஜி அலைக்கற்றை விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே மன்மோகன் சிங் மற்றும் தொலைத் தொடர்புத்துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் அமைச்சர் கபில் சிபலும் கூறியுள்ளனர். அமைச்சரவை எடுத்த முடிவுகளை அமல்படுத்தியதும், எனக்கு முன்பு பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த அருண் செüரி உருவாக்கிய விதிகளை அமலாக்கியதும்தான் நான் செய்தவை. நான் குற்றவாளி என்றால் அருண் செüரியும் குற்றவாளிதான் என்று ஆ. ராசா வாதிட்டார். பிரதமருக்கும் தெரியும்... 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சதி நடந்தது என்கிறார்கள். என்ன சதி நடந்தது? யூனிடெக் நிறுவனத்துக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. அதன் போட்டி நிறுவனத்துக்கும் அடுத்த நாளே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் என்ன சதி நடந்தது என்கிறீர்கள்? ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் தங்களது பங்குகளை எடில்சாட் மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தெரியும். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இது குறித்து பிரதமருக்கும் அவர் தெரிவித்தார். பிரதமர் எனக்கு உயர் பதவியில் இருப்பவர்தானே? இதில் பிரதமருக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் அது குறித்து தொலைத் தொடர்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவிடம் விளக்கம் கேட்டிருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை? நிருபர்கள் மீது பாய்ச்சல்... நான் இப்படிச் சொல்வதால் பிரதமரையும் சிதம்பரத்தையும் நான் குறிவைப்பதாக எழுதுகிறார்கள். அது தவறு. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. நான் சொல்லாததை எழுதுகிறார்கள். உண்மையை எழுதுவதாக இருந்தால், ஊடகங்களை நீதிமன்றத்துக்குள் அனுமதியுங்கள். இல்லாவிட்டால், அவர்களை (நிருபர்களை) வெளியே போகச் சொல்லுங்கள். எனக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், பிற நீதிமன்றங்களின் நெருக்குதல் தான். உண்மையைச் சொன்னால், 2ஜி அலைக்கற்றை விவகாரத்துக்குக் காரணமே அடுத்த போட்டியாளர் வந்துவிடாமல் தடுக்க கூட்டு சேர்ந்து செயல்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் தான். இவர்கள் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். 2007ம் ஆண்டு நான் அமைச்சரான பின்னர் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய், ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி எத்தனை நிறுவனங்கள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற விதியைக் கொண்டு வந்தது. இங்கு தான் பிரச்னை தொடங்கியது. உரிமம் கோரி 575 விண்ணப்பங்கள் வந்தன. இதையடுத்து விண்ணப்பங்களைக் குறைக்கவும் பரிசீலிக்கவும் வசதியாக 232 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தேன். அது தான் நான் செய்த தவறு. மனிதனாகப் பிறந்த எல்லோருமே தவறு செய்வது இயற்கை தான். மற்றபடி சதி நடந்தது என்பதெல்லாம் கற்பனையான வாதம்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...