மூன்றாம் கண்.,: நடிகர் ரவிச்சந்திரன் மறைவு: கலைஞர்கள் இரங்கல்

Pages

Monday, July 25, 2011

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு: கலைஞர்கள் இரங்கல்


பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மறைவுக்கு கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன்.
ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்து. 1964-ம் ஆண்டு ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான ரவிச்சந்திரன், தான் நடித்த முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரானார். நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960-களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஆண்டுக்கு பத்து படங்கள் வரை வெளியாகி அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்ததில் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார் ரவிச்சந்திரன். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் "காதலிக்க நேரமில்லை', "இதயக்கமலம்', "குமரிப்பெண்', "நான்', "மூன்றெழுத்து', "அதே கண்கள்' "உத்தரவின்றி உள்ளே வா' என பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர். அவருடைய படங்களில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகிவிடும். ஹீரோவாக நடித்த பிறகு சிறிது காலம் நடிப்புத்துறையிலிருந்து விலகியிருந்த ரவிச்சந்திரன் ஆபாவாணனின் "ஊமை விழிகள்' மூலம் மீண்டும் நடிகரானார். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தார். "மானசீக காதல்', "மந்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ராஜஸ்ரீ: ரவிச்சந்திரன் நடித்த முதல் படமான "காதலிக்க நேரமில்லை' படத்தில் நான்தான் அவருக்கு ஜோடி. நான் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையானதால் படப்பிடிப்பின்போது என்னை சீனியர் நடிகை என்று மிகுந்த மரியாதை கொடுப்பார். ஆனால் அவரைப் பார்த்தால் அறிமுக நடிகராகவே தெரியாது. தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். அண்மையில் விஜய் டி.வி.யில் நாங்கள் இருவரும் பங்கேற்ற "காஃபி வித் அனு" நிகழ்ச்சி எங்களை "காதலிக்க நேரமில்லை' காலத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்து மூன்று நாள்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் பார்த்தேன். அவருடைய மறைவை நம்ப முடியவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்ராலயா கோபு: நான் ஸ்ரீதரிடம் வசனகர்த்தாவாக இருக்கும்போது ரவிச்சந்திரன் நடிக்க வந்தார். "காதலிக்க நேரமில்லை' படத்துக்காக ஸ்ரீதர் ஏற்கெனவே நான்கு பேரைத் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் ரவியைப் பார்த்தவுடன் ""இவர்தான் நம் ஹீரோ'' என முடிவுசெய்துவிட்டார். ஆனாலும் ரவிச்சந்திரனிடம் அதைப்பற்றி ஏதும் கூறாமல் இருந்தார். அதனால் படப்பிடிப்பு தொடங்கும் நாள் வரை ரவிச்சந்திரன் பதற்றமாகத்தான் இருந்தார். பிறகு ஸ்ரீதர் அவரை படப்பிடிப்புக்கு அழைத்தவுடன்தான் சகஜ நிலைக்குத் திரும்பினார். அனைத்து இயக்குநர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர். அவரைப் பலரும் ரொமான்டிக் ஹீரோவாகத்தான் ரசித்தார்கள். ஆனால் ரவிச்சந்திரனுக்கு ஆக்ஷன் ஹீரோவாகத்தான் ஆசை. இரண்டிலுமே ஜொலித்தார். சில மாதங்களுக்கு முன்பு பார்க்கும்போது கூட அடுத்து ஒரு படம் இயக்க வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய மறைவு வேதனை தருவதாக உள்ளது.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்: "காதலிக்க நேரமில்லை' படத்தில் நான் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். ரவிச்சந்திரனுக்கு முதல் படம் என்பதால் அவரிடம் சகஜமாகப் பேசி, நடிப்பை சொல்லித் தாருங்கள் என ஸ்ரீதர் கூறினார். அதனால் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு இப்போது வரை தொடர்ந்துகொண்டிருந்தது. ரவிச்சந்திரனைப் போன்ற குரு பக்தி உடையவர்களை சினிமாவுலகில் பார்ப்பது சிரமம். ஸ்ரீதர் உடல் நலக் குறைவாக இருந்தபோது பல முறை அவரை நேரில் சென்று நலம் விசாரிப்பார். அவர் மறைந்த பிறகும் அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதலாகப் பேசிக்கொண்டிருப்பார். எப்போதும் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் இருந்த ஒரு மனிதரை காலம் எடுத்துக்கொண்டது. ஒரு நல்ல நண்பனை இழந்த சோகத்தில் இருக்கிறேன் பிலிம் நியூஸ் ஆனந்தன்: "காதலிக்க நேரமில்லை' பட வாய்ப்புக்காக ஸ்ரீதர் அலுவலகத்துக்கு வந்த ரவிச்சந்திரன், மிக இயல்பாக அவருக்கேயுரிய ஸ்டைலில் புகை பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய மேனரிஸத்தைப் பார்த்தவுடன் ஸ்ரீதர் அந்தக் கதைக்கு ஏற்ற கதாநாயகன் இவர்தான் என முடிவெடுத்துவிட்டார். அதன் பிறகு அவரது சினிமா கேரியர் உச்சத்துக்குப் போய்விட்டது. அவர் நடிக்காத காலகட்டத்தில் யாரிடமும் போய் வாய்ப்புக்காக கையேந்தியதில்லை. செயின்ட் தாமஸ் மவுண்ட் அருகில் இருக்கும் அவருடைய நிலத்தில் அமைதியாக விவசாயம் செய்துகொண்டிருந்தார். ஒரு மிகப் பெரிய ஸ்டார் நடிகர் சொந்தமாக விவசாயம் செய்வது என்பதை இப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவில் ஒரு புதிய ஸ்டைலை உருவாக்கிய நடிகர். அவருடைய மறைவு கலையுலகத்துக்கு ஒரு பேரிழப்பு. சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் மேஜர்தாசன்: ஆண்களே விரும்பும் அளவுக்கு அழகு படைத்த ரவிச்சந்திரன் பழகுவதற்கு இனிமையானவர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். பவுன் விலை ரூ.75 ஆக இருக்கும்போதே மாதச் சம்பளமாக ரூ.1,000 பெற்றவர். தன்னுடைய சக நடிகர்களிடமும் இயக்குநர்களிடமும் எப்போதுமே மரியாதையாக நடந்துகொள்வார். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். நடனம், சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தவர். அவரைப் பற்றிய நினைவுகள் என்றுமே நீங்காது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...