மூன்றாம் கண்.,: "அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு

Pages

Saturday, July 16, 2011

"அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு




மதுரையில் ஒத்தி வீட்டை அபகரிக்க, போலி பத்திரம் தயார் செய்ததாகக் கூறி, "அட்டாக்' பாண்டி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை சொக்கிக்குளத்தை சேர்ந்த ஈஸ்வரலால் மனைவி கல்பனா.
இவருக்கு, நாயக்கர் மகால் எதிரே, ஓட்டுவீடு இருந்தது. 2004ல், இந்த வீட்டை, ஆர்.கே.பாலன் என்பவருக்கு, ரூ. 2.75 லட்சத்திற்கு ஒத்திக்கு விட்டுள்ளார். 2005ல், கல்பனாவின் கணவர் ஈஸ்வரலால் இறந்து விட்டார். இந்நிலையில் கல்பனா, ஒத்திப் பணத்தை பாலனிடம் திருப்பிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட பாலன், இடத்தை காலி செய்யவில்லை.மதுரை, கீரைத்துறையை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் திருச்செல்வம். கல்பனாவின் இடத்தை, அவரது கணவர் ஈஸ்வரலால், மாரிமுத்துவிடம் 2005ல் வாடகைக்கு விட்டது போல, ஒரு போலி பத்திரம் தயார் செய்தனர். அதில், ஈஸ்வர்லாலின் கையெழுத்தை போலியாக போட்டனர். ரூ. ஒரு கோடி மதிப்புள்ள அந்த இடத்தை கைப்பற்றும் எண்ணத்தில், அதில் குளியலறை, கழிப்பறை அமைத்தனர். தயா மியூசிக்கல்ஸ் என்ற பெயரில், சி.டி., கடை, ஜெராக்ஸ் கடை வைக்கவும் வாடகைக்கு விட்டுள்ளனர். இதுபற்றி கேட்ட கல்பனாவிடம், "எனது மைத்துனர், "அட்டாக்' பாண்டி, கட்சியில் பெரிய ஆள். இந்த இடத்தில் நீ உரிமை கொண்டாட நினைத்தால், உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவோம்' என மிரட்டினர். கல்பனாவும் கணவர் இல்லாத சூழ்நிலையில், அவர்கள் மீதான பயத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. தற்போது மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் மனு கொடுத்தார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாரிமுத்து, திருச்செல்வம், "அட்டாக்' பாண்டியை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இ.பி.கோ., 406 - நம்பிக்கை மோசடி, 420 - மோசடி, 427 - இடத்தை சேதப்படுத்துதல், 448 - அத்துமீறல், 471 மற்றும் 506 (2) - மிரட்டுதல், போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதையடுத்து, மூவரையும் மதுரை மாவட்ட ஜே.எம்., எண் 6ல் மாஜிஸ்திரேட் சுஜாதா முன்னிலையில், அவரது வீட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களிடம், "போலீசார் உங்களை துன்புறுத்தினரா?' என, மாஜிஸ்திரேட் கேட்டார். அவர்கள் "இல்லை' என்றனர். "உங்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?' என கேட்டார். அவர்கள், "தெரியாது' என்றனர். "இது சிவில் வழக்கு. இதற்கும், "அட்டாக்' பாண்டிக்கும் சம்பந்தம் இல்லை' என, அவரது வக்கீல்கள் ராமசாமி, மணிகண்டன் தெரிவித்தனர். "ஜாமின் மனுவை கோர்ட்டில் விசாரிக்கும்போது அதை தெரிவியுங்கள்' எனக் கூறிய மாஜிஸ்திரேட், மூவரையும் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, "அட்டாக்' பாண்டி உட்பட மூவரையும், திருச்சி ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். கைதானவர்களில், தி.மு.க.,வைச் சேர்ந்த, "அட்டாக்' பாண்டி, மதுரை வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர். திருச்செல்வம், மதுரை மாவட்ட தி.மு.க., மாணவரணி துணை செயலர்.





Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...