மூன்றாம் கண்.,: நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரி ரெய்டு

Pages

Friday, July 22, 2011

நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரி ரெய்டுகேரள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்குச் சொந்தமான திருவனந்தபுரம், கொச்சி, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் வருமான வரித்துறையினர்,
ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் மலையாளம், தமிழ் உட்பட, பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். இவர், பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான, மறைந்த கே.பாலாஜியின் மருமகன். இவருக்கு திருவனந்தபுரம், கொச்சி, சென்னை உட்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவரைப் போலவே, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மம்முட்டி. இவர், கேரளா, வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவ்விரு பிரபல நடிகர்களும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலை விரிவாக்கம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, மூன்று கார்களில் வந்த வருமான வரித்துறையினர் திடீரென நுழைந்தனர். மம்முட்டி வீட்டில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடந்ததால், அன்று அவரும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்தனர். தொடர்ந்து, இரவு முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், காலையிலும் சோதனை தொடர்ந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக, ஷிப்ட் அடிப்படையில், மாறி மாறி வந்து சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மாலை 5 மணி வரை நடந்த சோதனையில், வீட்டில் இருந்த பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மம்முட்டியின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை, எழும்பூரில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டிற்கு காலை 7 மணிக்கு, வருமான வரித்துறையினர் சென்ற போது, அந்த வீடு ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, எழும்பூர், காசா மேஜர் சாலையில் உள்ள மோகன்லாலின் மாமனார், பழம்பெரும் நடிகர் பாலாஜியின் வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்தவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட வருமான வரித்துறையினர், வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, நடிகர் மோகன்லால், சென்னையில் இல்லை. வெளியூரில் படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதாக கூறப்பட்டது. பிற்பகல் 2 மணிவரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, வருமான வரித்துறையினரிடம் கேட்ட போது, "இது வழக்கமான ஒன்றுதான், அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்த பின், தகவல்களை அறிக்கை வாயிலாக தெரிவிக்கிறோம்' என்று, மழுப்பி விட்டனர்.

நடிகர் மம்முட்டி வீட்டில், வருமான வரித்துறை விசாரணை பிரிவு இயக்குனர் தலைமையில், பத்து பேர் கொண்ட அதிகாரிகள், சோதனையில் பங்கேற்றனர். நடிகர் மோகன்லால் வீட்டில், ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று பேர் கொண்ட குழு, சோதனையில் ஈடுபட்டது. இவ்விரு நடிகர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
"ஷூட்டிங்'கில் மோகன்லாலிடம் விசாரணை : ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் "ஷூட்டிங்'கில் இருந்த மலையாள நடிகர் மோகன்லாலிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளத்தில், மலையாள நடிகர் மோகன்லால், சினிமா படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். மதுரை, மத்திய வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நேற்று மதியம் 1.15 மணிக்கு மூன்று கார்களில் வாலிநோக்கம் வந்தனர். மோகன்லாலை "கேரவன்' உள்ளே அழைத்துச் சென்று, அவரிடம் மதியம் 1.30 முதல் மாலை 5.30 மணி வரை விசாரணை நடத்தினர். இதன்பின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய மோகன்லால், தொடர் விசாரணைக்காக அதிகாரிகளுடன் மதுரைக்குக் கிளம்பிச் சென்றார். விசாரணை குறித்து அதிகாரிகள் தகவல் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...