மூன்றாம் கண்.,: முதல்வர் துறை வசம் அரசு கேபிள் டிவி

Pages

Saturday, July 2, 2011

முதல்வர் துறை வசம் அரசு கேபிள் டிவிஅரசு கேபிள் டி.வி.யை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, கேபிள் டி.வி. நிறுவனத்தை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தனது வசமுள்ள உள்துறைக்கு அதை மாற்றியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை கேபிள் டி.வி. நிறுவனம் செயல்பட்டு வந்தது."கேபிள் டி.வி. நாட்டுடமையாக்கப்படும்' என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார்.கடந்த அதிமுக ஆட்சியில் கேபிள் டி.வி.யை நாட்டுடமையாக்க முயற்சிகளை மேற்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில், இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கும் நடவடிக்கையில் முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.கேபிள் ஆபரேட்டர்களுடன் சந்திப்பு: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மீண்டும் செயலுக்குக் கொண்டு வருவதற்கு முன்னதாக, கேபிள் ஆபரேட்டர்களை முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். கடந்த ஜூன் 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பே அரசு கேபிள் டி.வி.யை தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார். இதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.
நடவடிக்கை தீவிரம்: கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப, அதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார். முதல் கட்டமாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தன் வசம் கொண்டு வந்துள்ளார். அதாவது, தனது தலைமையின் கீழ் இயங்கும் உள்துறைக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மாற்றியுள்ளார். அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வந்தது. நிறுவனத்தை செயல்பட வைப்பதற்காக தனது துறை வசம் அதைக் கொண்டு வந்துள்ளார். இதன்மூலம், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் முதல்வர் ஜெயலலிதா கண்காணிக்க முடியும். மேலும், அரசு கேபிள் டி.வி. திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் இடர்பாடுகளை உள்துறையின் கீழ் இயங்கும் காவல் துறையின் மூலம் களைய முடியும் என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தீவிர ஆலோசனை: அரசு கேபிள் டி.வி. திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த திமுக ஆட்சியின் போது அரசு கேபிள் டி.வி. கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் உள்ளனர். தமிழகத்தில் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த ஒவ்வொரு அறைகளையும் அமைப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டது. இப்போது, அவை அனைத்தும் இயங்காத நிலையில் உள்ளன. அவற்றை இயங்க வைக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடிக்கும் அதிகமான அளவில் பணம் தேவைப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் செயல்பாடுகள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தபடி மூன்று மாதங்களுக்குள்ளாகவே அரசு கேபிள் டி.வி. தமிழகத்தில் செயல்படத் தொடங்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களும் பொது மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் என கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...