மூன்றாம் கண்.,: நெருக்கடியில் தயாநிதி மாறன்

Pages

Wednesday, July 6, 2011

நெருக்கடியில் தயாநிதி மாறன்




இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.  கடந்த 2004 முதல் 2007 வரை,
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தமிழகத்தைச் சேர்ந்த ஏர்செல் தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் தனது பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த தன்னுடைய நண்பருக்கு விற்பனை செய்யுமாறு நிர்பந்தப்படுத்தினார் என்பதுதான் குற்றச்சாட்டு. அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை இன்று(6.7.11) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த, சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை, இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. இதையடுத்து தயாநிதி மாறன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார். அவர் அமைச்சரவையிலிருந்து தானாக விலக முன்வராத நிலையில், பிரதமர் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சிபிஐ சார்பில் நிலவர அறிக்கையைப் படித்த மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தயாநிதி மாறன் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், 2004 – 2007-ம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில், சென்னையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனம், விரிவாக்க சேவைக்காக விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாக வேணுகோபால் கூறினார். 2004 பிப்ரவரி முதல் 2007 மே மாதம் வரை தயாநிதி மாறன்தான் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "ஏர்செல் நிறுவனத்தை விற்க அழுத்தம" மலேசியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு, சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனம் பங்குகளை விற்க தயாநிதி நிர்பந்தப்படுத்தினார். ஆனால் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் அந்தப் பங்குகளை விற்காததால், அவருக்கு விரிவாக்க உரிமம் வழங்கப்படவில்லை. ஆனால், நிர்பந்தத்தை அடுத்து, வேறுவழியின்றி ஏர்செல் பங்குகளை மலேசிய நிறுவனத்துக்கு விற்ற 6 மாதங்களில், அதாவது 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உரிமங்கள் வழங்கப்பட்டதாக சி பி ஐ குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பொதுநல வழக்குகளுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பு, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் குரூப் நிறுவனத்துக்கு சாதகமாக, தயாநிதி மாறன் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டி, சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தற்போது ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த 2004 மற்றும் 2007-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஏர்செல் நிறுவனத்துக்கு 14 உரிமங்களை வழங்கியதாகவும், அதற்குக் கைமாறாக, தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனத்தில், ஏர்செல் நிறுவனம் 599 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் அந்த ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், கடந்த மாதம் சிபிஐ முன்னிலையில் மாறனுக்கு எதிராக தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதன் அடிப்படையிலேயே, மாறன் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கத் துவங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அலைக்கற்றை தொடர்பாக நடந்த முறைகேடுகளால் பயனடைந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களைப் பற்றிய விசாரணை ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் முடிவடையும் என்று சிபிஐ வழக்கறிஞர் வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், 2001 முதல் 2008 வரை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை, செப்டம்பர் 30ம் தேதி்க்குள் முடிவடையும் என்றும் வேணுகோபால் தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, இம் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...