மூன்றாம் கண்.,: நார்வேயில் 80 பேர் சுட்டுக்கொலை

Pages

Saturday, July 23, 2011

நார்வேயில் 80 பேர் சுட்டுக்கொலை




நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 7 பேரை பலிகொண்ட குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ௨ மணி நேரம் கழித்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 80 பேர் பலியானார்கள்.
ஆஸ்லோ அருகில் உள்ள தீவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மாணவர் முகாமில் காவலர் போல உடையணிந்து வந்த ஆசாமி துப்பாக்கியால் சுட்டு இந்த கோர தாக்குதலை நடத்தி உள்ளான். மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று 7 பேரை பலி வாங்கியது. ஆஸ்லோ நகரில் உள்ள புகழ் பெற்ற சதுக்கம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றது. நார்வே பிரதமர் ஸ்டோல்டன் பர்க் அலுவலகம் அமைந்துள்ள 20 மாடி கட்டிடம் அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானார்கள். கட்டிடத்தின் ஜன்னல் கம்பிகள் உள்ளிட்டவை குண்டுவெடிப்பின் போது வெடித்து சிதறின. இந்த திடீர் தாக்குதலால் நகர மக்கள் பீதி அடைந்து அங்கும் இங்கும் ஓடினர். உலகின் அமைதி மிக்க நாடுகளில் ஒன்றான நார்வேயில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் நகரமான ஆஸ்லோவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உண்டாக்கிய அதிர்ச்சி அடங்குவதற்கு முன்பாகவே அடுத்த 2 மணி நேரத்தில் துப்பாக்கி ஏந்திய ஆசாமியின் கொலை வெறித் தாக்குதல் அரங்கேறியது. ஆஸ்லோ அருகே உள்ள உட்டோயா எனும் தீவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மாணவர் முகாமில் இந்த தாக்குதல் அரங்கேறியது. போலீசார் போல் உடை அணிந்து வந்த மர்ம ஆசாமி எந்திர துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.முதலில் மாணவர்களை தன்னை நோக்கி வருமாறு செய்கை காட்டி விட்டு அந்த ஆசாமி அவர்களை சுட்டுத் தள்ளினான். இந்த தாக்குதலில் 80 பேர் பலியானதாக கூறப்படுகிறது. முதல் கட்ட தகவல்கள் 10 பேர் மட்டுமே பலியானதாக தெரிவித்தாலும் அதன் பிறகு வந்த தகவல்கள் பலி எண்ணிக்கை அதிகரித்ததை உறுதிப்படுத்தின. தாக்குதல் நடத்தப்பட்ட தீவில் நார்வே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முகாம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்துக்கது.இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியாமல் மர்மமாகஇருந்தது. இஸ்லாமிய தீவிரவாதிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. நார்வேலேயே செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கம் இதன் பின்னே இருக்கலாம் என்று சந்தேகிக்கப் பட்டது. எனினும் தீவிர புலனாய்வுக்கு பிறகு நார்வே போலீசார் இந்த சம்பவத்துக்கு காரணமான 32 வயது மனிதர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஆன்டர்சன் ப்ரிவிக் என்று தெரிவந்துள்ளது. இந்த நபர்தான் குண்டுவெடிப்புக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் இவர் இருந்ததாகவும் அதன் பின்னரே தீவுக்கு துப்பாக்கி ஏந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது நோக்கம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த கோர தாக்குதலை உலக தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...