மூன்றாம் கண்.,: புதிய நாடாக தெற்கு சூடான் உதயமானது.

Pages

Sunday, July 10, 2011

புதிய நாடாக தெற்கு சூடான் உதயமானது.




ஆப்ரிக்காவில் புதிய நாடாக தெற்கு சூடான் நேற்று உதயமானது. அதை மக்கள் விடிய விடிய மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஆடிப் பாடி கொண்டாடி வருகின்றனர். ஆப்ரிக்க நாடான சூடானின் வடக்கு பகுதியில் முஸ்லிம்களும்,
தெற்கு பகுதியில் பழங்குடியினரும் வசிக்கின்றனர். அங்கு பல காலமாக இன மோதல்கள் நடந்தன. வடக்கு சூடான் பகுதி மக்கள் பொருளாதார முன்னேற்றம்  பெற்றவர்களாக இருந்தனர். தெற்கு சூடான் மக்கள் வறுமையில் வாடினர். எனவே, வளர்ச்சி பெறுவதற்காக தெற்கு சூடானை தனி நாடாக பிரிக்க வலியுறுத்தி 1950ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்தது. இதில் இரு தரப்பிலும் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். இதையடுத்து  2005ம் ஆண்டில் இரு தரப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 16ம் தேதி சூடானை பிரிக்க தெற்கு பகுதி முழுவதும் விரிவான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தெற்கு சூடானை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி 98.83 சதவீத வாக்குகள் கிடைத்ததாக பிப்ர வரி 7ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து ஜூபாவை தலைநகராக கொண்டு தெற்கு சூடான் தனி நாடு ஜூலை 9ம் தேதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது அறிவித்தபடி தெற்கு சூடான் தனி நாடாக நேற்று மாறியது. அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஆகியவை உடனடியாக அங்கீகாரம் அளித்தன. ஐக்கிய நாடுகள் சபையில் இதுவரை 192 உறுப்பு நாடுகள் இருந் தன. தெற்கு சூடான் புதிதாக 193வது உறுப்பினராக சேர்ந்துள்ளது. ஆப்ரிக்காவை சேர்ந்த உறுப்பு நாடுகளில் 54வது இடத்தை பிடித்தது. மேலும், அடுத்த ஆண்டு முதல் ஜூலை 9ம் தேதி தெற்கு சூடான் தினமாக கொண்டாடப் படும் என்று ஐநா அறிவித்துள்ளது. புதிய நாட்டின் முதல் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வீதியெங்கும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மக்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் சுதந்திர தினத்தை கொண்டாடினர். தெற்கு சூடானின் முதல் அதிபராக சல்வா கிர் பொறுப்பேற்றுள்ளார். உலகில் புதிய நாடாக தெற்கு சூடான் உதயமானதற்கு இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளன. புதிய நாடான மகிழ்ச்சியை  தெற்கு சூடான் மக்கள் விடிய விடிய வீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...