மூன்றாம் கண்.,: ஸ்டாலின் செயல்தலைவரா? பொதுக்குழு விவாதிக்கும்

Pages

Thursday, July 21, 2011

ஸ்டாலின் செயல்தலைவரா? பொதுக்குழு விவாதிக்கும்




தி.மு.க.வின் செயற்குழுவும், பொதுக்குழுவும் மிகுந்த பரபரப்புக்கு இடையே கோவையில் ஜூலை 23, 24-ம் தேதிகளில் கூடுகிறது. மு.க.ஸ்டாலினை கட்சியின் செயல்தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அவருடைய ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பான விவாதம் தி.மு.க. தரப்பில் பல்வேறு ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது என்றாலும் அண்மையில் மிக அதிகமாக அலசப்பட்டது. ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் ஸ்டாலினைக் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதுபோல் தமிழகம் எங்கும் தி.மு.க. சார்பில் பேசக்கூடியவராக ஸ்டாலின்தான் இருக்கிறார். அதனால் இந்தக் காலகட்டத்திலேயே ஸ்டாலின் தலைவரானால் எதிர்காலத்தில் எவ்வித இடரும் இருக்காது என்று கருதியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்த தனது விருப்பத்தையும் ஸ்டாலின் கருணாநிதியிடம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. அறிவாலயத்துக்கு அவர் சில நாள்கள் வராமல் இருந்தார். பிறகுதான் பல்வேறு வழக்குகளால் தி.மு.க. திணறிக் கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்கலாமா என்று தலைவர் கருணாநிதி அவரிடம் எடுத்துக் கூறி சமாதானப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பொதுக்குழுவில்...: இருப்பினும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்னை குறித்து பொதுக்குழுவில் பேசத் தயாராகி வருகின்றனர் என்று தெரிகிறது. தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரசாரம் செய்யக்கூடியவராக ஸ்டாலின்தான் இப்போது இருக்கிறார். அதனால் அவருக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என்று கேட்க உள்ளனராம். இதை எதிர்த்துப் பேசவும் தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். ஸ்டாலின் தலைவர் ஆவதற்கு மு.க.அழகிரி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பலரும் "கருணாநிதிதான் தி.மு.க.வின் வாக்குவங்கி. அவர் இருக்கும் வரை வேறு யார் தலைவராக அறிவிக்கப்பட்டாலும் தி.மு.க.வுக்குச் சரிவாக இருக்கும்' என்று கருதுகின்றனர். ஸ்டாலின் செயல் தலைவர் என்றால் கருணாநிதி செயல்படாத தலைவரா என்று கேள்வி எழுப்பி, இன்றைக்கும் கருணாநிதி அளவுக்குத் துரிதமாக யாராலும் செயல்பட முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். மக்களவைக் குழு: மாவட்டச் செயலாளர்களுக்குப் பதில் மக்களவைக் குழு அமைத்து அதன் கீழ் அவர்களைச் செயல்பட வைக்கலாமா என்று தி.மு.க. தலைமைக் கழகத்தால் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. இதில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் மாவட்டச் செயலாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதிக சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் தங்கள் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் சட்டப் பேரவைத் தொகுதிகள் குறைவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள் மக்களவைக் குழுவின் கீழ் செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் போன்ற மூத்த தலைவர்கள் இந்த மாற்றத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக தி.மு.க. முக்கியத் தலைவர் ஒருவர், "மாவட்டச் செயலாளர்களிடம் தலைமை கருத்துதான் கேட்டுள்ளது. தீர்மானமாகச் சொல்லவில்லை. எனவே பழைய முறைப்படி மாவட்டச் செயலாளர் தலைமையின் கீழே செயல்படலாம்' என்றுதான் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்.  கருத்து வேறுபாடு: சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தோல்விக்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று தி.மு.க. நிர்வாகிகளிடையே உள்ள ஒற்றுமைக் குறைவுதான் என்ற கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. "நமது ஒற்றுமைக் குறைவைப் பயன்படுத்தி அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இப்போது நிலப் பறிப்பு வழக்கு போன்றவற்றை தி.மு.க.வினர் மீது போடுவதற்கும் இதுதான் காரணம். தி.மு.க.வினர் இடையே ஒற்றுமை இல்லை. இதனாலேயே நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்' என்று தி.மு.க. தலைமையால் பொதுக்குழு உறுப்பினர்களிடம் உணர்த்தத் திட்டமிட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.






Share/Bookmark

1 comment:

  1. D.M.K was not defeated by its insufficient unity. It was defeated by the people for its illegal actions such as corruption,2G robbery and dictatorship.D.M.K. leaders deny to accept their mistakes. samy

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...